குடும்ப ஓய்வூதியத்தை கேட்டதால் பெண் கொலை: - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


குடும்ப ஓய்வூதியத்தை கேட்டதால் பெண் கொலை: - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 3 Feb 2023 2:44 AM IST (Updated: 3 Feb 2023 2:53 AM IST)
t-max-icont-min-icon

குடும்ப ஓய்வூதியத்தை கேட்டதால் பெண்ணை கொன்ற போலீசாருக்கு விதித்த ஆயுள்தண்டனையை உறுதி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

மதுரை


குடும்ப ஓய்வூதியத்தை கேட்டதால் பெண்ணை கொன்ற போலீசாருக்கு விதித்த ஆயுள்தண்டனையை உறுதி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

பெண் கொலை

மதுரையைச் சேர்ந்தவர் மாரிமுத்தம்மாள். இவரது கணவர் இறந்தபின்பு, அவரது குடும்ப ஓய்வூதியத்தை பெற்று வசித்தார். இவருக்கு சவுந்தரவள்ளி, பாரதிதேவி, சந்திரா என 3 மகள்களுக்கும் திருமணமாகி குடும்பத்தினருடன் வசித்தனர். இதனால் மாரிமுத்தம்மாள், தனது 2-வது மகள் பாரதிதேவியின் பராமரிப்பில் இருந்து வந்தார். தனக்கு கிடைத்த மாத ஓய்வூதிய தொகையை, பாரதிதேவியிடம் வழங்கிவிடுவார்.

ஆனால் அந்த தொகையில் தனக்கும் ஒரு பங்கு தர வேண்டும் என்று சவுந்தரவள்ளி கேட்டுள்ளார். இதனால் சகோதரிகள் குடும்பத்தினருக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பாரதிதேவியின் மகனும், போலீஸ்காரருமான சதீஷ்குமார், கடந்த 2009-ம் ஆண்டு சவுந்தரவள்ளியை சுட்டுக்கொலை செய்தார். இதனால் சதீஷ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து இரு குடும்பத்தினருக்கு இடையில் விரோதம் அதிகரித்தது.

இந்தநிலையில் மாரிமுத்தம்மாளின் 3-வது மகள் சந்திராவின் மகள்கள் அனிதா, கவிதா ஆகியோர் கடந்த 2011-ம் ஆண்டில் தெருவில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சைக்கிளில் வந்த சதீஷ்குமார், தங்களைப்பற்றித்தான் இருவரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என்று ஆத்திரத்தில் அரிவாளால் கவிதாவை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவத்தில் சதீஷ்குமாரை தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர். இந்த கொலை வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட கோர்ட்டு, அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

ஆயுள் தண்டனை உறுதி

இந்த தீர்ப்பை எதிர்த்து சதீஷ்குமார், மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுந்தர்மோகன் ஆகியோர் விசாரித்தனர்.

அப்போது அரசு வக்கீல் திருவடிகுமார் ஆஜராகி, கவிதா கொலையை நேரில் பார்த்த சாட்சிகள் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில்தான் மனுதாரருக்கு ஆயுள் தண்டனையை கீழ்கோர்ட்டு அளித்து உள்ளது என்றார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை தள்ளுபடி செய்தனர்.


Next Story