கார் மோதியதில் பெண் பலி
காரியாபட்டி அருகே கார் மோதிய விபத்தில் பெண் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
காரியாபட்டி, ஜன.28-
காரியாபட்டி அருகே கார் மோதிய விபத்தில் பெண் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
கார் மோதியது
அருப்புக்கோட்டைஅருகே உள்ள வெள்ளக்கோட்டையை சேர்ந்தவர் செல்வி (வயது 30). அருப்புக்கோட்டை மணிநகரத்தை சேர்ந்த லட்சுமணன் (26). இவர்கள் 2 பேரும் சின்னவள்ளிகுளத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் மதுரைக்கு தனது உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்று விட்டு பின்னர் அருப்புக்கோட்டை செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் அருப்புக்கோட்டை சென்று கொண்டு இருந்தனர்.
பெண் பலி
அப்போது ஏ.முக்குளம் வந்தவாசி கிராமத்தை சேர்ந்த சிவகுமார் (45) என்பவர் ஓட்டி வந்த கார், செல்வி ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் செல்வி, லட்சுமணன் ஆகிய 2 பேரும் பலத்த காயமடைந்தனர்.
காயம் அடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி செல்வி பரிதாபமாக இறந்தார்.
லட்சுமணன் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.