மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி


மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி
x
தினத்தந்தி 26 Aug 2023 1:15 AM IST (Updated: 26 Aug 2023 1:16 AM IST)
t-max-icont-min-icon

நத்தத்தில் மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலியானார். அவரது கணவர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

திண்டுக்கல்

மகளின் திருமணம்

நத்தம் அருகே உள்ள ஊராளிப்பட்டியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது 48). இவரது மனைவி ஜெயந்தி (44). இவர்களது மகளுக்கு 2 நாட்களில் திருமணம் நடைபெற இருந்தது. இதனால் திருமணத்துக்கு தேவையான பொருட்கள் மற்றும் விருந்து வைப்பதற்காக மளிகை பொருட்கள் வாங்குவதற்காக நேற்று முன்தினம் இரவு ஆரோக்கியசாமி, தனது மனைவியுடன் நத்தம் அவுட்டர் பகுதிக்கு வந்தார். அப்போது அங்குள்ள ஒரு கடையில் அவர்கள் பொருட்கள் வாங்கினர். பின்னர் கடைக்கு வெளியே 2 பேரும் சாலையோரமாக நின்று கொண்டிருந்தனர்.

இந்தநிலையில் மெய்யம்பட்டியை சேர்ந்த சூரியபிரசாத் (22) என்பவர் வேலை தொடர்பாக நத்தம் வந்தார். பின்னர் அவர் நத்தத்தில் இருந்து ஊருக்கு திரும்பி சென்றுகொண்டிருந்தார். நத்தம் அவுட்டர் பகுதியில் அவர் வந்ததும், கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், அங்கு சாலையோரம் நின்று கொண்டிருந்த ஜெயந்தி, ஆரோக்கியசாமி ஆகியோர் மீது மோதியது. பின்னர் சாலையில் கவிழ்ந்தது. இதில், ஜெயந்தி, ஆரோக்கியசாமி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த சூரியபிரகாஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

பெண் பலி

இதுகுறித்து தகவல் அறிந்த நத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது அவர்கள், காயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஜெயந்தி பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story