போலீஸ்காரர் ஓட்டிவந்த கார் மோதி பெண் பலி
செஞ்சி அருகே போலீஸ்காரர் ஓட்டி வந்த கார் மோதி பெண் பலியானார்.
செஞ்சி:
செஞ்சி அருகே உள்ள அனந்தபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முனியன். இவரது மனைவி லட்சுமி(வயது 65). இவர் தனது மகன் ராமச்சந்திரன் என்பவருடன் வசித்து வருகிறார். நேற்று இரவு தனது மகனின் வீட்டு முன்பு படுத்து தூங்கினார்.
அப்போது அதே தெருவை சேர்ந்தவரும், உளுந்தூர்பேட்டையில் உள்ள சிறப்பு காவல் படையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருபவருமான முத்துப்பாண்டி(வயது 29) என்பவர் கார் ஓட்டி வந்தார்.
பெண் பலி
அவரது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து லட்சுமி மீது ஏறி, இறங்கியது. இதில் லட்சுமி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். உடனே போலீஸ்காரர் முத்துப்பாண்டி, அங்கேயே காரை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.
இது பற்றி தகவல் அறிந்ததும் அனந்தபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீஸ்காரர் முத்துப்பாண்டி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.