அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் பலி


அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் பலி
x

அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் பலியானார்.

அரியலூர்

தா.பழூர்

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள சிலால் கிராமத்தில் சுமார் 50 வயது பெண் ஒருவர் நள்ளிரவு 12.45 மணி அளவில் தா.பழூர் திசையிலிருந்து ஜெயங்கொண்டம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் அவரது பின்புறத்திலிருந்து மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அப்பகுதியில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் படுகாயம் அடைந்த பெண்ணை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து தகவலறிந்த தா.பழூர் போலீசார் காயமடைந்த பெண் யார்? என்பது குறித்தும், அவர் மீது மோதிய அடையாளம் தெரியாத வாகனம் குறித்தும் விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்யப்பட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக காயமடைந்த பெண் அழைத்துச் செல்லப்பட்டார். அரியலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையில் இறந்து போன பெண் ஜெயங்கொண்டம் நாச்சியார் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மனைவி ராணி(வயது 42) என்பது விசாரணையில் தெரியவந்தது. ராணி சிலால் கிராமத்தில் அவரது உறவினர் வீட்டிற்கு வந்திருந்த நிலையில் சம்பவம் நடைபெற்றது போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. சம்பவம் குறித்து ராணியின் கணவர் செல்வம் தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story