தீக்குளிக்க முயன்ற பஞ்சாயத்து பெண் உறுப்பினர் கைது
தென்காசி கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற பஞ்சாயத்து பெண் உறுப்பினர் கைது செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயினுலாப்தீன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துமாதவன், உதவி ஆணையர் (கலால்) ராஜ மனோகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள், பட்டா மாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்டவை தொடர்பாக மொத்தம் 411 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது விசாரணை மேற்ெகாண்டு, மனுதாரர்களுக்கு உரிய பதிலளிக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் ஆகாஷ் அறிவுறுத்தினார்.
கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, கலெக்டர் அலுவலகம் முன் வந்த தென்காசி அருகே உள்ள சில்லரைபுரவு பஞ்சாயத்து 2-வது வார்டு உறுப்பினர் மகேஸ்வரி, தான் கொண்டு வந்திருந்த மண்எண்ணெயை திடீரென தனது தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் அவரை தடுத்து நிறுத்தி தலையில் தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். பின்னர் அவர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், சில்லரைபுரவு பஞ்சாயத்து தலைவர் பொது இடத்தில் வைத்து தன்னை அவதூறாக பேசியதாக குறிப்பிட்டு உள்ளார். இந்த நிலையில் மகேஸ்வரி பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக கூறி அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.