1000 ரூபாய் பென்சனுக்காக ரூ.3 கோடி சொத்தை இழந்த பெண்-மகன் ஏமாற்றி எழுதி வாங்கி கொண்டதாக சேலம் கலெக்டரிடம் புகார்


1000 ரூபாய் பென்சனுக்காக ரூ.3 கோடி சொத்தை இழந்த பெண் கலெக்டரிடம் கொடுத்துள்ள புகார் மனுவில், தன்னுடைய மகன் ஏமாற்றி எழுதி வாங்கி கொண்டதாக கூறியுள்ளார்.

சேலம்

வீடு, கடை அபகரிப்பு

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. சேலம் பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்த லட்சுமி (வயது 68) என்பவர், தன்னுடைய உறவினர்களுடன் வந்து கலெக்டர் கார்மேகத்திடம் கொடுத்த மனுவில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய கணவர் இறந்துவிட்டார். 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். எனக்கு சொந்தமான வீடு, கடை உள்ளது. அதன் மதிப்பு ரூ.3 கோடி இருக்கும்.

மாதம் ரூ.1000 ஓய்வூதியம் பெற்றுத்தருவதாக கூறி என்னுடைய மகன் என்னை ஏமாற்றி கையெழுத்து பெற்றுக்கொண்டு வீடு, கடையை அவனது பெயருக்கு கிரையம் செய்துவிட்டான். இதுபற்றி கேட்டதற்கு வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு துரத்திவிட்டான். இதனால் எனது தங்கை வீட்டில் வசித்து வருகிறேன். எனவே, எனது சொத்தை அபகரித்த மகன் மீது நடவடிக்கை எடுத்து அவற்றை மீட்டுக்கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

உரிய பாதுகாப்பு

இதேபோல், மல்லூர் அருகே பாரப்பட்டி மேச்சேரியம்பாளையம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் மனைவி பூங்கொடி, தன்னுடைய 2 மகள்கள், ஒரு மகனுடன் வந்து கலெக்டரிடம் கொடுத்த மனுவில், பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினர்களுக்கும், எங்களுக்கும் நடைபாதை தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது மகள்களை தாக்கியுள்ளனர். மல்லூர் போலீசில் புகார் செய்த போது, கண்காணிப்பு கேமரா வைக்க சொன்னார்கள். அதையும் அவர்கள் சேதப்படுத்தி விட்டனர். அவர்களுக்கு பயந்து போய் நாங்கள் தோட்டத்தில் வசிக்கிறோம். எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அடுத்த மண்மலை பகுதியை சேர்ந்த தொழிலாளி சிவகுமார், தன்னுடைய மனைவி தீபா மற்றும் மகனுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தார். திடீரென தான் வைத்திருந்த மண்எண்ணெய்யை தங்கள் மீது ஊற்ற முயன்றனர். அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி ஆட்டோவில் ஏற்றி டவுன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை

இதுகுறித்து மனு கொடுக்க வந்த சிவக்குமார் கூறுகையில், செந்தாரப்பட்டி அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் நடத்துனராக பணிபுரிந்து வரும் ஒருவர், 2021-ம் ஆண்டு கால்நடைத்துறையில் உதவியாளர் பணிக்கு வேலை வாங்கி தருவதாக கூறினார். அதை நம்பி முதலில் ரூ.7 லட்சமும், நிலத்தை விற்பனை செய்து ரூ.8 லட்சமும் கொடுத்தேன். அதன்பிறகு சம்பந்தப்பட்ட நபரிடம் வேலை குறித்து கேட்டபோது, வேலை வாங்கி தர முடியாது என்றும், பணமும் தரமுடியாது என்றும் கூறிவிட்டார்.

இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்து குடும்பத்தினருடன் தீக்குளிக்க கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தேன். எனவே, அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுத்து அவரிடம் இருந்து எனது பணத்தை மீட்டுத்தர வேண்டும், என்றார்.

கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை

ஓமலூர் அருகே கொங்குப்பட்டி ஊராட்சி அம்பேத்கர் காலனியை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களுக்கு இலவச வீடு வழங்கக்கோரி நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்திவிசாரித்தனர்.

இதுகுறித்து மனு கொடுக்க வந்த பெண்கள் கூறுகையில், ஓமலூர் நல்லூர் கொங்குப்பட்டி அம்பேத்கர் காலனியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். ஆரம்பத்தில் ஒவ்வொரு குடும்பத்தில் உறுப்பினர்கள் குறைவாக இருந்தனர். ஆனால் தற்போது, குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எனவே, வேறு இடத்தில் வீடுகள் கட்டி தரக்கோரி பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. சுமைதாங்கி ஏரி பகுதியில் அரசுக்கு சொந்தமான இடம் இருக்கிறது. எனவே, அங்கு எங்களுக்கு வீடுகள் கட்டிகொடுத்தால் நன்றாக இருக்கும் என்றனர்.

அரை நிர்வாணத்துடன் மனு

சேலம் மாவட்டம் இடங்கணசாலை ஏகாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (78). இவருக்கு அதேபகுதியில் சொந்தமாக 10 சென்ட் நிலம் உள்ளது. இதனிடையே, அப்பகுதியை சேர்ந்த 2 பேர் போலி பட்டா தயாரித்து அவரது நிலத்தை அபகரிப்பு செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி ராமசாமி அவர்களிடம் கேட்டபோது அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து வருவாய்த்துறை மற்றும் பத்திரப்பதிவு துறையில் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நேற்று காலை முதியவர் ராமசாமி அரை நிர்வாணத்துடன் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த முதியவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். இதையடுத்து போலி பட்டா தயாரித்து நிலத்தை அபகரிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாரிடம் ராமசாமி கேட்டுக்கொண்டார்.

நேற்று ஒரே நாளில் பல்வேறு தரப்பினர் மனுகொடுக்க திரண்டதால் கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.


Next Story