பெண் கழுத்தை இறுக்கி கொலை


பெண் கழுத்தை இறுக்கி கொலை
x

கணவர், மகன்களை உதறிவிட்டு வந்த பெண்ணை சேலையால் கழுத்தை இறுக்கி கொலை செய்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை

கணவர், மகன்களை உதறிவிட்டு வந்த பெண்ணை சேலையால் கழுத்தை இறுக்கி கொலை செய்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்காதல்

திருவண்ணாமலை அருகே உள்ள கண்ணக்குருக்கை பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 36), லாரி டிரைவர். இவருக்கு திருமணமாகி 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவருக்கும், சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி என்பவரின் மனைவி நதியா (32) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் தங்கராஜியின் செல்போனில் இருந்து தவறுதலாக சென்ற அழைப்பின் மூலம் அவருக்கும், நதியாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாக தெரிகிறது. தங்கராஜ் வேலைக்காக சென்னைக்கு செல்லும் போது நதியாவை சந்தித்து உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

நதியாவின் கள்ளக்காதலை அறிந்த பார்த்தசாரதி அதனை கைவிடுமாறு கூறியுள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த நதியா அவரது கணவன் மற்றும் மகன்களை உதறிவிட்டு கண்ணக்குருக்கை கிராமத்தில் உள்ள தங்கராஜியின் வீட்டிற்கு வந்தார்.

அப்போது அவர் தங்கராஜியிடம், நான் இனிமேல் உன்னோடு தான் வாழ்வேன் என்று கூறியுள்ளார். இதை கேட்டு தங்கராஜியின் மனைவி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் தங்கராஜ் மற்றும் நதியாவிடம் தகராறு செய்து உள்ளார். மேலும் வேதனை அடைந்த நதியா தற்கொலை செய்து கொள்வதாக அங்கிருந்து சென்றார்.

கழுத்தை இறுக்கி கொலை

பின்னர் தங்கராஜ் அவரை சமாதானம் செய்ய பெரியகோளாப்பாடி மலை குன்று பகுதிக்கு அழைத்து சென்றார். அப்போது தங்கராஜிக்கும், நதியாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த தங்கராஜ், நதியாவை அவரது சேலையால் கழுத்தை இறுக்கி கொலை செய்தார்.

மலை குன்று பகுதியில் நீண்ட நேரமாக சத்தம் கேட்டதால் அக்கம் பக்கத்தினர் அங்கு சென்றனர். பொதுமக்கள் வருவதை கண்டதும் தங்கராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, நதியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பியோடிய தங்கராஜை போலீசார் கைது செய்தனர்.

கணவன், மகன்களை உதறிவிட்டு திருவண்ணாமலைக்கு வந்த பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story