கோவில் வளாகத்தில் பெண் கம்பியால் அடித்துக்கொலை-கள்ளத்தொடர்பை கைவிடும்படி கூறியதால்கணவன் வெறிச்செயல்
ஆலங்குளத்தில், கோவில் வளாகத்தில் பெண் கம்பியால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். கள்ளத்தொடர்பை கைவிடும்படி கூறியதால் கணவன் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார்.
ஆலங்குளம்:
ஆலங்குளத்தில், கோவில் வளாகத்தில் பெண் கம்பியால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். கள்ளத்தொடர்பை கைவிடும்படி கூறியதால் கணவன் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார்.
பட்டப்பகலில் நடந்த இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
லாரி டிரைவர் குடும்பம்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 45). லாரி டிரைவர். இவருடைய மனைவி சுமதி (40). கடந்த 20 வருடங்களுக்கு முன்பு காதல் கலப்பு திருமணம் செய்த இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
கண்ணனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததால் அடிக்கடி குடித்துவிட்டு சுமதியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
கொலை
ஆலங்குளம் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள முத்தாரம்மன் கோவிலுக்கு சுமதி தினமும் மாலை வந்து சாமி கும்பிடுவது வழக்கம். இதேபோல் நேற்று மாலை வழக்கம்போல் கோவிலுக்கு சாமி கும்பிட சுமதி வந்துள்ளார். சிறிது நேரத்தில் கணவர் கண்ணனும் கோவிலுக்கு வந்தார். கோவில் வளாகத்தினுள் வைத்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது.
அப்போது ஆத்திரம் அடைந்த கண்ணன் அருகில் கிடந்த ஊஞ்சல் கம்பியை எடுத்து சுமதியின் தலையில் பலமாக அடித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த சுமதி ரத்த வெள்ளத்தில் விழுந்து துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.இதனைக்கண்ட கண்ணன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
மடக்கிப்பிடித்தனர்
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு சகாய ஜோஸ், இன்ஸ்பெக்டர் மகேஷ் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமதியின் உடலை கைப்பற்றினர். சுமதியின் உடலை நெல்லையில் உள்ள தடயவியல் ஆய்வக உதவி இயக்குனர் ஆனந்தி ஆய்வு செய்தார். பின்னர் உடலை நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தப்பி ஓடிய கண்ணனை ஆலங்குளம் போலீசார் தீவிரமாக தேடினர். பின்னர் ஆலங்குளம் அருகே அத்தியூத்து கிராமப்பகுதியில் வைத்து கண்ணனை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை சம்பவம் நடந்த கோவில் வளாகத்தினுள் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
திடுக்கிடும் தகவல்கள்
போலீசாரின் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது, கண்ணனுக்கும், வேறு ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சுமதி, கணவரிடம் கள்ளத்தொடர்பை கைவிடும்படி கூறியுள்ளார். இதனால் கண்ணனுக்கும், சுமதிக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதேபோல் நேற்று மாலை கோவிலுக்கு வந்த சுமதிக்கும், கண்ணனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கண்ணன் கம்பியை வைத்து தாக்கியதில் சுமதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்று விசாரணையில் தெரியவந்தது.
கள்ளத்தொடர்பை கைவிட வற்புறுத்திய மனைவியை கோவில் வளாகத்தினுள் வைத்து கணவன் அடித்து கொன்று வெறிச்செயலில் ஈடுபட்ட பயங்கர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.