கோர்ட்டு வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
காப்பகத்தில் உள்ள குழந்தையை தரக்கோரி திருச்சி கோர்ட்டு வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
காப்பகத்தில் உள்ள குழந்தையை தரக்கோரி திருச்சி கோர்ட்டு வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தீக்குளிக்க முயற்சி
திருச்சி கோர்ட்டு வளாகத்தில் சமரச தீர்வு மையம் உள்ளது. இங்கு நேற்று மதியம் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்து இருந்தார். இந்த நிலையில் அந்த பெண் பாட்டிலில் வைத்திருந்த மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதை கண்ட அங்கிருந்தவர்கள் அந்த பெண்ணிடம் இருந்த மண்எண்ணெய் பாட்டிலை பிடுங்கி காப்பாற்றினர். உடனே அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
காப்பகத்தில் ஒப்படைப்பு
இது குறித்த தகவல் அறிந்த செசன்ஸ் கோர்ட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண் மதுரையை சேர்ந்த ராஜேஸ்வரி (வயது 45) என்றும், இவரது கணவர் இறந்து விட்டார் என்றும் தெரியவந்தது. மேலும் இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இதில் 4 வயதுள்ள ஒரு குழந்தையை வைத்து திருச்சியில் பிச்சை எடுத்துள்ளார். இதில் நேற்று முன்தினம் போலீசார் நடத்திய சோதனையில் பிச்சை எடுக்க பயன்படுத்திய குழந்தையை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
பரபரப்பு
இதையடுத்து நேற்று காப்பகத்திற்கு சென்ற ராஜேஸ்வரி குழந்தையை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறினார். அங்கிருந்தவர்கள் குழந்தையை தர முடியாது என்று கூறியுள்ளனர். இதனால் விரக்தியடைந்த ராஜேஸ்வரி தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. இது குறித்து செசன்ஸ் கோர்ட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் நேற்று கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.