வீட்டில் பட்டாசு தயாரித்த பெண் கைது
போச்சம்பள்ளியில் வீட்டில் பட்டாசு தயாரித்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரது வீட்டில் இருந்து வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மத்தூர்
வெடிபொருட்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியில் ஒரு வீட்டில் பட்டாசு தயாரிக்கப்படுவதாக ஜம்புகுட்டப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் அருண்குமாருக்கு தகவல் கிடைத்தது. அவரது தலைமையில் வருவாய்த்துறையினர் போச்சம்பள்ளி எம்.ஜி.ஆர். நகரில் அப்துல் ரகுமான் என்பவரின் வீட்டில் நேற்று முன்தினம் சோதனை செய்தனர்.
அங்கு அவரது மனைவி சோட்டி (55) பட்டாசு கடை உரிமம் பெற்றிருந்தது தெரிய வந்தது. மேலும் வீட்டின் பின்புறம் பாதுகாப்பு இல்லாமல் பட்டாசுகள் தயாரித்து வந்தது தெரிய வந்தது. அங்கிருந்து 700 நாட்டு பட்டாசுகள், பொட்டாசியம் புளோரைடு உப்பு 9 கிலோ, 500 கிராம் கரி மருந்து ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
விசாரணை
பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட வெடி பொருட்கள் பாரூல் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற தனியாருக்கு சொந்தமான வெடி பொருள் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.
இது தொடர்பாக போச்சம்பள்ளி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சோட்டியை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
கிருஷ்ணகிரியில் பட்டாசு குடோன் விபத்தில் 9 பேர் பலியான சம்பவம் நடந்து முடிந்துள்ள நிலையில் குடியிருப்பு பகுதியில் பட்டாசு தயாரித்த பெண் கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பட்டாசு கடைகளில் சோதனை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டாசு விற்பனை செய்வதற்கு உரிமம் வாங்கிய நபர்கள், வீடுகள் அல்லது ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களில் பட்டாசு தயாரித்து வருவதாக கூறப்படுகிறது.
எனவே மாவட்டம் முழுவதும் பட்டாசு கடைகளில் போலீசார் மற்றும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். உரிமம் வாங்கி பட்டாசு கடை இயங்குகிறதா? அரசு அனுமதியுடன் பட்டாசு தயாரிக்கப்படுகிறதா? அப்படியே உரிமம் வாங்கி இருந்தால் அரசு விதிகளுக்கு உட்பட்டு அவை உள்ளதா? உள்ளிட்டவை குறித்து சம்பந்தப்பட்ட இடங்களில் போலீசார் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.