குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்த பெண், கர்ப்பமானதற்காக இழப்பீடு கேட்டு வழக்கு
குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்த பெண், கர்ப்பமானதற்காக இழப்பீடு கேட்டு வழக்கில் அதிகாரிகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை,
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த சத்யா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
எனக்கு 3 குழந்தைகள் உள்ளனர். தொண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த ஆண்டு குடும்பக்கட்டுப்பாடு ஆபரேஷன் செய்து கொண்டேன். ஆனால், அடுத்த 2 மாதத்தில் மீண்டும் கர்ப்பமானேன். குழந்தை ஊனமுற்றதாக பிறக்கலாம் என்று கூறி டாக்டர்கள் கருவை கலைத்தனர். முறையாக கருவை கலைக்காததால், ரத்தம் கட்டிகளாக மாறியுள்ளது. மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கு மேலாக சிகிச்சை பெற்று பாதிப்பு சரி செய்யப்பட்டது. இதற்காக ரூ.2½ லட்சம் வரை செலவு செய்துள்ளேன். இதற்கு காரணமான டாக்டர்களிடம் இருந்து மருத்துச்சிகிச்சை செலவு ரூ.2½ லட்சமும், இழப்பீடாக ரூ.2½ லட்சமும் வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதில் அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்திவைத்தார்.