வீட்டில் கியாசை திறந்து தீ வைத்து 2 மகன்களுடன் பெண் தற்கொலை முயற்சி
களக்காடு அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் வீட்டில் கியாஸ் சிலிண்டரை திறந்து தீவைத்து 2 மகன்களுடன் பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
களக்காடு:
களக்காடு அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் வீட்டில் கியாஸ் சிலிண்டரை திறந்து தீவைத்து 2 மகன்களுடன் பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கணவன்-மனைவி தகராறு
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மூங்கிலடி வெப்பல் கீழத்தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் பாலன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பாலரேவதி (வயது 38). இவர்களுக்கு ஸ்ரீதரன் (12), ரிஷிதரன் (11) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் ஸ்ரீதரன் 7-ம் வகுப்பும், ரிஷிதரன் 6-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.
நேற்று முன்தினம் இரவில் பாலரேவதி தனது கணவர் ரமேஷ் பாலனுடன் செல்போனில் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கியாசை திறந்து தீ வைத்தார்
நள்ளிரவில் 2 மகன்களும் வீட்டில் ஒரு அறையில் தூங்கிக் கொண்டு இருந்தனர். கணவருடன் ஏற்பட்ட தகராறில் விரக்தி அடைந்த பாலரேவதி தனது 2 மகன்களுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதற்காக வீட்டில் இருந்த சிலிண்டரின் கியாசை திறந்து விட்டு அறை முழுவதும் பரவச்செய்தார்.
பின்னர் சிலிண்டருக்கு அவர் தீவைத்தார். இதில் பாலரேவதி மீதும், தூங்கிக் கொண்டு இருந்த ஸ்ரீதரன், ரிஷிதரன் ஆகியோர் மீதும் தீப்பற்றியது. அவர்கள் அலறி துடித்தனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வெளியே ஓடி வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
இதுகுறித்து உடனடியாக களக்காடு போலீசுக்கும், நாங்குநேரி தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதில் பாலரேவதி, ஸ்ரீதரன், ரிஷிதரன் ஆகியோர் பலத்த தீக்காயம் அடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தீப்பற்றியதில் வீடும் சேதம் அடைந்தது.
பரபரப்பு
இந்த தற்கொலை முயற்சி சம்பவம் குறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கணவருடன் ஏற்பட்ட தகராறில் வீட்டில் கியாசை திறந்து தீ வைத்து 2 மகன்களுடன் பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.