பொன்னமராவதி ேபாக்குவரத்து பணிமனையை பெண்கள் முற்றுகை
தினசரி பஸ்களை இயக்க வலியுறுத்தி பொன்னமராவதி போக்குவரத்து பணிமனையை பெண்கள் முற்றுகையிட்டனர்.
புகார்
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே தேனூர் ஊராட்சி கருகப்பூலாம்பட்டி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஊருக்கு காலை மற்றும் மாலை என 2 வேளையும் பஸ்கள் இயக்கப்பட்டது. காலை வரும் பஸ்சில் அதிகமான கூட்டம் இருப்பதால் நாள்தோறும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்லும் மக்கள் அதில் பயணிக்காக முடியாமல் அவதிக்குள்ளாகினர்.
மேலும் மாலை நேரத்தில் வரும் பஸ்சும் கடந்த சில நாட்களாக முறையாக இயக்கப்படாமல் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வருவதால் இரவு நேரங்களில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை பலமுறை பொன்னமராவதி பேருந்து பணிமனையில் புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
முற்றுகை
இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் திரண்டு வந்து தினசரி பஸ்களை இயக்க வலியுறுத்தி பொன்னமராவதி போக்குவரத்து பணிமனையை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொன்னமராவதி போலீஸ் இன்ஸ்பெக்டர் தனபாலன் மற்றும் பணிமனை மேலாளர் முற்றுகையிட்ட பெண்கள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பொதுமக்களிடம் இனிவரும் காலங்களில் முறையாக பஸ் இயக்கப்படும் என்று கூறியதையடுத்து பெண்கள் மற்றும் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.