குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
கழுகுமலையில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கழுகுமலை:
கழுகுமலையில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
குடிநீர் தட்டுப்பாடு
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை சுற்றுலா தலமாகும். இங்கு சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தற்போது சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.
தற்போது குடிநீரானது கழுகுமலையில் சீராக வழங்கப்படுவதில்லை. மாதத்திற்கு 1 முறை அதாவது 25 நாட்கள் அல்லது 28 நாட்களுக்கு 1 முறை மட்டும் 1 மணி நேரம் குடிநீரானது வழங்கப்படுகிறது. அதுவும் சில பகுதிகளுக்கு முழுமையாக கிடைப்பதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
முற்றுகை
சுமார் ஓராண்டாக இதே நிலை நீடித்து வருகிறது. குடிப்பதற்கு பொதுமக்கள் தினமும் 1 குடம் 12 ரூபாய்க்கு விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் குடிநீர் கட்டணம் மட்டும் மாதந்தோறும் 120 ரூபாய் பொதுமக்களிடம் வசூலிக்கப்படுகிறது. தினமும் 10 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கிய பஞ்சாயத்து நிர்வாகம் இப்போது முறையாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வில்லை.
இதுகுறித்து பல முறை பஞ்சாயத்து நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் பலனில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் நேற்று கழுகுமலை பேரூராட்சிக்கு உட்பட்ட 15-வது வார்டு குமரேசன் நகர் பகுதியில் சீராக குடிநீர் வழங்க வேண்டும் என சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பேச்சுவார்த்தை
தகவல் அறிந்ததும் கழுகுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களிடம் பொதுமக்கள், தங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். உடனே போலீசார் பஞ்சாயத்து தலைவர் மற்றும் செயல் அலுவலருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் 15-வது வார்டு கவுன்சிலரும், பேரூராட்சி துணை தலைவருமான சுப்பிரமணியன் மற்றும் செயல் அலுவலர் கணேசன் ஆகியோர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
தங்கள் பகுதியில் வாரத்திற்கு ஒரு முறையாவது குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் வழங்கப்படும் தேதியையும் முறையாக சொல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.