குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்


குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
x

தலைஞாயிறில் குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நாகப்பட்டினம்

வாய்மேடு:

தலைஞாயிறில் குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காலிக்குடங்களுடன் சாலை மறியல்

நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியத்தில் உள்ள காடந்தேத்தியில் அரசு குடியிருப்பில் 190 வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு கடந்த இரண்டு மாதங்களாக குடிநீர் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் குடிநீர் வழங்க வேண்டும், மயான கட்டிடம், மயான சாலை அமைக்க வேண்டும். வேலைவாய்ப்பற்ற மக்களுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காலிக்குடங்களுடன் அந்த பகுதி பெண்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியச் செயலாளர் ராஜா தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்து தலைஞாயிறு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வராஜ், ராஜூ, வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது உடனடியாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலால் தலைஞாயிறு- திருத்துறைப்பூண்டி சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story