குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
நாட்டறம்பள்ளி அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நாட்டறம்பள்ளி அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குடிநீர் வழங்கவில்லை
நாட்டறம்பள்ளியை அடுத்த ஊசிகல்லு மேடு பகுதியில் சுமார் 25-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சுமார் 6 மாதமாக சீரான குடிநீர் வினியோகம் செய்யவில்லை என கூறப்படுகிறது.
மேலும் சில நேரங்களில் வினியோகிக்கப்படும் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாக ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளரிடம் பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
சாலை மறியல்
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் அக்ராஹரம் பகுதியில் திருப்பத்தூர் -நாட்டறம்பள்ளி செல்லும் சாலையில் அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த பஸ்சில் அதிக அளவில் மாணவ, மாணவிகள் வந்ததால் அவர்கள் மாற்று பஸ்களில் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். நாட்டறம்பள்ளி தாசில்தார் க.குமார் சம்பவ சென்று உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியலில் ஈடுப்பட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.