குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
வேதாரண்யம் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குடிநீர் வரவில்லை
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே பிராந்தியங்கரை, அண்டகத்துறை, மூலக்கரை ஆகிய பகுதிகளில் கடந்த 20 நாட்களாக கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் வரவில்லை. இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அந்த பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட் பெண்கள் காலி குடங்களுடன் பிராந்தியங்கரையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பஸ்சை மறித்து கோஷம்
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றியக்குழு உறுப்பினர் முருகையன், மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர் வெற்றியழகன் மற்றும் பலர் கலந்து கொண்டு பஸ்சை மறித்து குடிநீர் வழங்கக்கோரி கோஷம் எழுப்பினர். இதை அறிந்த வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ்சந்திர போஸ், வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கன்னிகா மற்றும் போலீசார் அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி கொள்ளிடம் கூட்டு குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர்.
1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
அதன்பேரில் பெண்கள் போராட்டத்தை கைவிட்டனர். சாலை மறியலால் திருத்துறைப்பூண்டி-பிராந்தியங்கரை வழியாக வேதாரண்யத்துக்கு செல்லும் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.