பெட்ரோலுடன் தீக்குளிக்க வந்த பெண்களால் பரபரப்பு


பெட்ரோலுடன் தீக்குளிக்க வந்த பெண்களால் பரபரப்பு
x

சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு பெட்ரோலுடன் தீக்குளிக்க வந்த பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்

சேலம் சிவதாபுரம் பகுதியை சேர்ந்தவர் பூபதி. வெள்ளி பட்டறை தொழில் செய்து வருகிறார். இவர், தனது முதல் மனைவியை விவாகரத்து செய்த நிலையில் எழிலரசி என்பவரை 2-ம் திருமணம் செய்து கொண்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பூபதி, எழிலரசி ஆகியோர் மோட்டார் சைக்கிளில் நெய்காரப்பட்டி பகுதியில் சென்றனர். அப்போது, அவர்களை 4 பேர் வழிமறித்து தாக்கி மோட்டார் சைக்கிளை பறித்து சென்றனர். இதில் படுகாயம் அடைந்த பூபதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இந்நிலையில், எழிலரசி தனது தங்கையுடன் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது, அவரின் பையை போலீசார் சோதனை செய்தபோது, அதற்குள் பெட்ரோல் பாட்டில் இருந்தது தெரியவந்தது. இதுபற்றி அவரிடம் போலீசார் விசாரித்தனர். அதற்கு தனது கணவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து மோட்டார் சைக்கிளை மீட்டு தர வேண்டும்.

இது குறித்து கொண்டலாம்பட்டி போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று எழிலரசி கூறினார். இதையடுத்து அவரை டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதேபோல், வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன் மனைவி சரஸ்வதி. இவர், தனது 2 குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவரின் பையை போலீசார் பரிசோதித்தபோது, பெட்ரோல் கேன் இருப்பது தெரியவந்தது. அவரிடம் விசாரித்தபோது, எங்களுக்கு சொந்தமான நிலத்தை சுற்றி உறவினர்கள் வேலி அமைத்துள்ளனர். இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் குழந்தைகளுடன் தீக்குளிப்பதற்காக பெட்ரோலுடன் வந்ததாக போலீசாரிடம் சரஸ்வதி கூறினார். இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு பெட்ரோலுடன் 2 பெண்கள் தீக்குளிக்க வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story