இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பெண்கள் தர்ணா
இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பெண்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
கல்லக்குடி டால்மியாபுரத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளிப்பதற்காக வந்து இருந்தனர். அப்போது, அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலக வாசல் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது, எங்களுக்கு இலவச பட்டா வேண்டும் என்ற கோஷமிட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர்கள் கலெக்டர் இங்கு வராமல் நாங்கள் செல்ல மாட்டோம் என்று தொடர்ந்து தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின் கலெக்டரிடம் மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர். இதேபோல் திருவெறும்பூர் பனையக்குறிச்சி சர்கார்பாளையத்தில் மாதா சொரூபத்தை உடைத்து சேதப்படுத்தியவர்களை கைது செய்யக்கோரி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலக வாசல் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கலெக்டரிடம் மனு அளித்தனர். மனுவை பெற்ற கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பிறகு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.