மாடு குறுக்கே வந்ததால் விபத்து; மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் பலி-கணவர் படுகாயம்


மாடு குறுக்கே வந்ததால் விபத்து; மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் பலி-கணவர் படுகாயம்
x

மாடு குறுக்கே வந்ததால் ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பெண் பலியானார். அவரது கணவர் படுகாயம் அடைந்தார்.

திண்டுக்கல்

நிலக்கோட்டை அருகே பள்ளபட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் சின்னத்தம்பி (வயது 55). விவசாயி. இவரது மனைவி ஜெயலட்சுமி (50). இவர்கள் 2 பேரும் சம்பவத்தன்று உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்துகொள்வதற்காக மதுரை மாவட்டம் உசிலம்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

சோழவந்தான் சாலையில் கிருஷ்ணாபுரம் பிரிவு அருகே அவர்கள் சென்றபோது, சாலையின் குறுக்கே மாடு ஒன்று வந்தது. அப்போது மாடு மீது மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிளை சின்னத்தம்பி நிறுத்த முயன்றார். அதற்குள் மிரண்டுபோன மாடு, மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதிவிட்டு ஓடியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த கணவன்-மனைவி கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயலட்சுமி பரிதாபமாக இறந்தார். சின்னத்தம்பிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து விளாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story