திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு


திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
x

கணவரை பொய் வழக்கில் போலீசார் கைது செய்ததை கண்டித்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர்

கணவரை பொய் வழக்கில் போலீசார் கைது செய்ததை கண்டித்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

தீ்க்குளிக்க முயன்ற பெண்

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. அப்போது மனு கொடுக்க தனது மகளுடன் வந்த ஒரு பெண் திடீரென்று தான் கொண்டு வந்த கேனில் இருந்த மண்ணெண்ணெயை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இதை கவனித்து, விரைந்து சென்று அந்த பெண்ணை தீக்குளிக்க விடாமல் தடுத்தனர். பின்னர் குடத்தில் தண்ணீர் கொண்டு வந்து அந்த பெண் மீது ஊற்றினார்கள்.

கணவர் மீது பொய் வழக்கு

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண் திருப்பூர் வ.உ.சி.நகரை சேர்ந்த ஜான்சி (வயது 48) என்பது தெரிய வந்தது.

அவர் கூறும்போது, 'எனது கணவர் தனசேகர், அப்பகுதியில் உள்ள கோவிலில் பூசாரியாக உள்ளார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு லாட்டரி மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக எனது கணவர் மீது பொய் வழக்கு போட்டு வடக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அன்றே வடக்கு போலீஸ் நிலையம் முன் மறியலில் ஈடுபட்டோம். எனது குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இது குறித்து உரிய விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும்' என்றார்.

பின்னர் அதிகாரியிடம் மனு கொடுக்க போலீசார் அந்த பெண்ணை அழைத்துச்சென்றனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story