மகளிர் உரிமைத்தொகை வழங்குவதில் நிராகரிப்பா? விண்ணப்பங்களின் நிலையை அறிய தாலுகா அலுவலகங்களில் குவிந்த பெண்கள்: இணையசேவை பாதிப்பால் ஏமாற்றம்


தினத்தந்தி 20 Sept 2023 12:15 AM IST (Updated: 20 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மகளிர் உரிமைத்தொகை வழங்குவதில் தங்களது விண்ணப்பங்களின் நிலை குறித்து அறிந்து கொள்ள கோட்டாட்சியர் மற்றும் தாலுகா அலுவலகங்களில் பெண்கள் குவிந்தனர். இதில் இணைய சேவை பாதிப்பு காரணமாக அவர்கள் தங்கள் விண்ணப்பங்களின் நிலை குறித் அறிந்து கொள்ள முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

கடலூர்

மகளிர் உரிமைத்தொகை

கடலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் மாதந்தோறும் 1000 ரூபாய் பெறுவதற்காக 6 லட்சத்து 8 ஆயிரத்து 862 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் பெரும்பாலானவர்களுக்கு கடந்த 15-ந் தேதி வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும் எனவும், இதற்காக கலெக்டர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகங்களில் உதவி மையம் அமைக்கப்படும் என கலெக்டர் அறிவித்திருந்தார்.

பொதுமக்கள் ஏமாற்றம்

அதன்படி கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெறும் கூட்ட அரங்கில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான உதவி மையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதில் விண்ணப்பித்து உரிமைத்தொகை பெறாத மக்கள், தங்கள் விண்ணப்பங்களின் நிலை குறித்து குறுஞ்செய்தி ஏதும் வராததால், அது பற்றி அறிந்து கொள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.

ஆனால் இணைய சேவை (சர்வர் பிரச்சினை) பாதிப்பால், விண்ணப்பங்களின் நிலை குறித்து அறிந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதேபோல் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகம், தாலுகா அலுவலகம் மற்றும் விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகம், சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகம் மற்றும் பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம், விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர் ஆகிய தாலுகா அலுவலகத்திலும் மகளிர் உரிமைத்திட்டத்திற்கான உதவி மையம் அமைக்கப்பட்டது.

ஆனால் மாவட்டம் முழுவதும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தாலுகா அலுவலகங்கள் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகங்களில் ஒரே நேரத்தில் குவிந்ததால், இணைய சேவையில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் தங்கள் விண்ணப்பங்கள் குறித்து அறிந்து கொள்ள முடியாமலும், மீண்டும் விண்ணப்பிக்க முடியாமலும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

வாக்குவாதம்

இந்த நிலையில் விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் அமைக்கப்பட்ட கலைஞர் மகளிர் உரிமை திட்ட சிறப்பு உதவி மையத்தில் ஏராளமான பொதுமக்கள் நேற்று குவிந்தனர். அப்போது அதற்கான இணையதளம் சரியான முறையில் இயங்காததால் பயனாளிகள் கடும் அவதி அடைந்தனர். இதனால் பயனாளிகளுக்கும், உதவி மையத்தில் இருந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்து வந்த விருத்தாசலம் போலீசார், பயனாளிகளை சமாதானப்படுத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story