அரசு விடுதி மாணவிகள் திடீர் போராட்டம்
அரசு விடுதி மாணவிகள் திடீர் போராட்டம்
உடுமலை,
உடுமலை அரசு மாணவிகள் விடுதிக்கு, ஏற்கனவே பணியில் இருந்த வார்டனையே மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்று கோரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு மாணவிகள் விடுதி
உடுமலை பாபுகான் வீதியில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் அரசு மாணவிகள் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் 54 மாணவிகள் தங்கியுள்ளனர். இந்த விடுதியில் நகராட்சி குடிநீர் குழாய் உள்ளது. ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே வரும். அந்த தண்ணீர் அனைத்து மாணவிகளின் தேவைக்கும் போதாது.
இந்த விடுதி வளாகத்தில் உள்ள ஆழ்குழாய் கிணற்று தண்ணீரும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.இந்த நிலையில் இந்த ஆழ்குழாய் கிணற்று மோட்டார் பழுதடைந்தது. அதனால் இந்த விடுதி மாணவிகள், கடந்த 4 நாட்களாக விடுதிக்கு அருகில் உள்ள பொது அடிபம்புக்கு சென்று தண்ணீர் பிடித்து வந்தனர். இதனால் மாணவிகள் சிரமத்திற்குள்ளாகினர்.
பேராட்டம்
இந்த நிலையில் இந்த விடுதி மாணவிகள் நேற்று பள்ளிகளுக்கு செல்லாமல் விடுதியின் வாசற்படியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றிய தகவல் கிடைத்ததும் வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் அங்கு வந்து மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவிகள் கூறும்போது " இந்த விடுதியில் வார்டனாக இருந்தவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தாராபுரத்திற்கு மாற்றப்பட்டார். அவரையே மீண்டும் இந்த விடுதிக்கு வார்டனாக பணியமர்த்த வேண்டும் என்றனர்.அப்போது மாணவிகளின் கோரிக்கை, மாவட்ட கலெக்டரிடம் தெரிவிக்கப்படும் என்று வருவாய்த்துறையினர் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு விடுதிக்குள்சென்றனர். இதற்கிடையில், பழுதடைந்திருந்த மோட்டார் சரிசெய்யப்பட்டது.