முக்கிய அரசு பொறுப்புகளில் பெண்கள்: மகளிர் கோட்டையாக மாறும் பெரம்பலூர்


பெரம்பலூர் மாவட்டத்தில் முக்கிய அரசு பொறுப்புகளில் பெண்கள் உள்ளதால் மகளிர் கோட்டையாக மாறுகிறது.

பெரம்பலூர்

அனைத்து துறைகளிலும் பெண்கள்

கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்ற சொலவடைக்கு ஏற்ப இப்போது உள்ள பெண்கள் கல்வி கற்று சாதனை படைத்து வருகிறார்கள். ஆண்கள் மட்டுமே அனைத்து துறைகளிலும் பணி புரிந்து வந்த நிலையில் தற்போது பெண்களும் பணி புரிந்து வருகின்றனர். அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டம் மகளிர் கோட்டையாக மாறவுள்ளது. ஏற்கனவே பெரம்பலூர் மாவட்டத்தில் உயர்ந்த பதவிகளில் பெண்கள் அங்கம் வகிக்கின்றனர்.

அதன்படி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பதவியில் பல்கீஸ் பணிபுரிந்து வருகிறார். மாவட்ட கலெக்டராக ஸ்ரீவெங்கடபிரியாவும், வருவாய் அலுவலராக அங்கையற்கண்ணியும், வருவாய் கோட்டாட்சியராக நிறைமதியும் பணிபுரிந்து வருகின்றனர். இதனால் நீதித்துறை, மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றில் பெண்கள் தான் உயர்ந்த பதவியில் பணிபுரிகிறார்கள்.

உள்ளாட்சி பதவிகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி பதவிகளிலும் பெண்களே அதிகம் பதவி வகிக்கிறார்கள். பெரம்பலூர் நகர்மன்ற தலைவராக அம்பிகாவும், 4 பேரூராட்சிகளில் குரும்பலூர் தலைவராக சங்கீதாவும், பூலாம்பாடி தலைவராக பாக்கிய லட்சுமியும், அரும்பாவூர் தலைவராக வள்ளியம்மையும் பதவி வகித்து வருகின்றனர். ஊராட்சி ஒன்றிய தலைவர்களாக பெரம்பலூரில் மீனாவும், வேப்பூரில் பிரபாவும் பதவி வகித்து வருகின்றனர்.

தற்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வரும் மணி சென்னை தாம்பரம் போலீஸ் தலைமையகம் மற்றும் நிர்வாகம் துணை கமிஷனராக பணியிட மாற்றம் செய்து, அவருக்கு பதிலாக சென்னையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றி வந்த ஷியாமளா தேவி பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது.

போலீஸ் சூப்பிரண்டும் பெண்

இதனால் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக ஷியாமளா தேவி விரைவில் பொறுப்பேற்க உள்ளார். இதனால் மாவட்ட போலீஸ் அலுவலகத்திலும் பெண் தான் உயர்ந்த பதவியில் பணிபுரிகிறார் என்ற பெருமையை பெரம்பலூர் பெற உள்ளது. ஏற்கனவே பெரம்பலூர் மாவட்டத்தில் 5 பெண்கள் போலீஸ் சூப்பிரண்டுகளாக பணியாற்றி சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது 6-வதாக ஷியாமளா தேவி பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்க உள்ளார். இதனால் பெரம்பலூர் மாவட்டம் மகளிர் கோட்டையாக மாறுகிறது.


Next Story