மலைச்சரிவுகளில் சுள்ளி பொறுக்கும் பெண்கள்
ஊட்டியில் ஆபத்தை உணராமல் மலைச்சரிவுகளில் பெண்கள் சுள்ளி பொறுக்கி வருகின்றனர்.
ஊட்டி,
ஊட்டியில் ஆபத்தை உணராமல் மலைச்சரிவுகளில் பெண்கள் சுள்ளி பொறுக்கி வருகின்றனர்.
ஆபத்தான மலைச்சரிவுகள்
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சி மற்றும் கேத்தி பேரூராட்சி எல்லையில் வேலிவியூ பகுதி உள்ளது. வெளிமாநிலங்கள் மற்றும் குன்னூரில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இந்த வழியாக வந்து செல்கின்றனர். மேலும் ஊட்டியில் நிலவும் சீதோஷ்ண காலநிலை அப்பகுதியில் இருந்து தொடங்கும்.
வேலிவியூ பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இதற்கிடையே பொதுமக்கள் விறகு சேகரிப்பதற்காக ஊட்டி-குன்னூர் சாலையில் வேலிவியூ பகுதியில் 100 அடி உயர செங்குத்தான மலைச்சரிவில் ஏறி இறங்குகின்றனர். இந்த காட்சி அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை அதிர்ச்சி யடைய வைக்கிறது. ஆபத்தான மலைச்சரிவுகளில் ஏறி வனப்பகுதியில் கிடக்கும் சுள்ளி விறகுகளை சேகரித்து வருகின்றனர்.
விறகு சேகரிப்பு
மலைச்சரிவில் ஏறி, இறங்கும் போது ஈரப்பதமாக இருந்து வழுக்கினால் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, எங்களது வீடுகளுக்கு சமையல் கியாஸ் சிலிண்டர் இணைப்பு உள்ளது. இங்கு தினமும் வீட்டில் குளிப்பது உள்பட பிற பயன்பாட்டுக்கு சூடான தண்ணீர் தேவைப்படுகிறது. இதனால் அதிகமாக பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. சிலிண்டர் விலை ரூ.1,100-ஐ கடந்து விட்டதால், விறகு அடுப்பு மூலம் தண்ணீரை சூடாக்கி வருகிறோம்.
இதற்காக மலைச்சரிவில் உள்ள சீகை மரங்களில் இருந்து கீழே விழும் கிளைகள், மரப்பட்டைகளை சேகரித்து கொண்டு வருகிறோம். 50-க்கும் மேற்பட்டோர் இந்த மலைச்சரிவில் விறகுகளை சேகரித்து வருகிறார்கள் என்றனர். மலைச்சரிவுகளில் விறகுக்காக ஆபத்தை உணராமல் பொதுமக்கள் சென்று வருகின்றனர். இதனால் விபரீதம் ஏற்படக்கூடும். தற்போது குடியிருப்புக்குள் வனவிலங்குகள் புகுந்து வரும் நிலையில், விறகு சேகரிக்கும் போது வனவிலங்குகள் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே, இதற்கு தீர்வு காண மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.