பிரச்சினைகளை எதிர்கொள்ள பெண்கள் முன்வர வேண்டும்; வேலூர் சரக டி.ஐ.ஜி. பேச்சு
பிரச்சினைகளை எதிர்கொள்ள பெண்கள் தைரியமாக முன்வர வேண்டும் என்று மருதர் கேசரி ஜெயின் கல்லூரி ஆண்டு விழாவில் வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா கூறினார்.
வாணியம்பாடி
பிரச்சினைகளை எதிர்கொள்ள பெண்கள் தைரியமாக முன்வர வேண்டும் என்று மருதர் கேசரி ஜெயின் கல்லூரி ஆண்டு விழாவில் வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா கூறினார்.
கல்லூரி ஆண்டு விழா
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் கல்லூரியின் 28-ம் ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள சுவாமி விவேகானந்தா உள்ளரங்கில் நடைபெற்றது. கல்லூரி தலைவர் எம்.விமல்சந்த் ஜெயின் தலைமை தாங்கினார். கல்லூரி நிர்வாகிகள் கே.ராஜேஷ்குமார் ஜெயின், எம்.சுதர்சன்குமார் ஜெயின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி ஆங்கிலத்துறை தலைவரும், பேராசிரியையுமான ஏ.சுமைரா வரவேற்றார். கல்லூரி செயலாளர் சி.லிக்மிசந்த் ஜெயின் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். முதல்வர் எம்.இன்பவள்ளி ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
உலகத்தில் கல்வி மட்டும் மிகப்பெரிய சக்தி வாய்ந்த ஆயுதமாக உள்ளது. அதனை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும். உங்கள் முன்னேற்றத்துக்கு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் பக்க பலமாக உள்ளனர்.
பிரச்சினைகளை எதிர்கொள்ள...
பெற்றோர்களுக்கு நல்ல மகளாக இருக்க வேண்டும் என்றால் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். திருமணத்துக்கு பிறகு நல்ல மனைவி மற்றும் நல்ல தாயாக இருக்க வேண்டும். போலீஸ் சீருடையில் டி.ஐ.ஜி.யாகவும், வீட்டில் குடும்ப தலைவியாகவும், பிள்ளைகளுக்கு நல்ல தாயாகவும் இருந்து வருகிறேன்.
பெண்களின் பாதுகாப்புக்காக பல சட்டங்கள் உள்ளன. பிரச்சினைகளை எதிர்கொள்ள பெண்கள் தைரியமாக முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் தொழில் அதிபர் சிவக்குமார், ஆம்பூர் தக்ஷிலா பள்ளி செயலாளர் ஆனந்த் சிங்கவி, முத்தமிழ் மன்ற செயலாளர் என்.பிரகாசம், பாண்டியன், கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியைகள் மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனர். முடிவில் மக்கள் தொடர்பு அலுவலர் சக்திமாலா நன்றி கூறினார்.