பெரம்பலூர் நகராட்சியை கண்டித்து காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல்
காவிரி கொள்ளிட குடிநீர் வினியோகிக்காத பெரம்பலூர் நகராட்சியை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குடிநீர் வினியோகம் தடை
காவிரி கொள்ளிடத்தில் இருந்து பெரம்பலூர் நகருக்கு கொள்ளிட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கொள்ளிடத்தில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுவதால், பெரம்பலூர் நகருக்கு குடிநீர் வழங்கும் கிணறு வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. இதனால் பெரம்பலூருக்கு குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகத்தினர் ஏற்கனவே பொதுமக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இதனிடையே குடிநீர் வழங்க நகராட்சி நிர்வாகம் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்தநிலையில் பெரம்பலூர் நகருக்கு கொள்ளிட குடிநீர் வழங்கும் பணி பெரம்பலூர் சங்குப்பேட்டை உள்பட அனைத்து வார்டு பகுதிகளிலும் கடந்த 20 நாட்களாக தடைபட்டுள்ளது. இதனை கண்டித்து நேற்று முன்தினம் அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
பெரம்பலூர் நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்காததை கண்டித்து சிவன் கோவில் தெருவை சேர்ந்த தன்னார்வலர் துணைவன் தலைமையில் 2-வது நாளாக நேற்று சங்குபேட்டை சிக்னலில், சாலையின் இருபுறங்களிலும் பொதுமக்கள் மற்றும் பெண்கள் காலிக்குடங்களுடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் இடையே வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) மனோகரன், பெரம்பலூர் தாசில்தார் கிருஷ்ணராஜ், மாவட்ட தலைமையிட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மதியழகன், பாண்டியன், பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது குடிநீர் வழங்க மாற்று ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.