குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல்
குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.
இலுப்பூர் அருகே மேலப்பட்டி புதுநகர் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்ட குடியிருப்பு பகுதியில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களுக்கு கடந்த சில நாட்களாக முறையான குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அந்த பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் காலிக்குடங்களுடன் நேற்று புதுக்கோட்டை-விராலிமலை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அன்னவாசல் போலீசார், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் சம்பவ இ்டத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் குடிநீர் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண்பதாக வாக்குறுதி அளித்தனர். இதனையடுத்து பெண்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது