மேலூர் அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து 2-வது நாளாக பெண்கள் போராட்டம்


மேலூர் அருகே  டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து 2-வது நாளாக பெண்கள் போராட்டம்
x

மேலூர் அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து 2-வது நாளாக பெண்கள் போராட்டம் நடத்தினர்.

மதுரை

மேலூர்

மேலூர் அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து 2-வது நாளாக பெண்கள் போராட்டம் நடத்தினர்.

டாஸ்மாக் கடை

மேலூர் அருகே நத்தம் ரோட்டில் உள்ளது சாணிபட்டி. இங்குள்ள டாஸ்மாக் கடையினால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டதால் இந்த கடையை மூட கோரிக்கை விடுத்து கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரசு அதிகாரிகளுக்கு புகார் மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை அடுத்து இப்பகுதி கிராம மக்கள் சாலை மறியல் செய்ய முடிவு செய்து அறிவித்தனர். அதன்படி நேற்று முன்தினம் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் சாணிபட்டியில் திரண்டு சாலை மறியல் செய்தனர். அப்போது போலீசார் மற்றும் வருவாய் துறையினர் டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் சாலை மறியல் கைவிடப்பட்டது.

ஆனால் டாஸ்மாக் கடையில் வழக்கம் போல விற்பனை தொடர்ந்தது. அதனால் அதிருப்தி அடைந்த கிராம பெண்கள் மீண்டும் நேற்று 2-வது நாளாக சாணிபட்டியில் கொளுத்தும் வெயிலில் ரோட்டில் உட்கார்ந்து மறியல் செய்தனர்.

பேச்சுவார்த்தை

இதையடுத்து கேசம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிலட்சுமிராஜா மற்றும் மேலூர் போலீஸ் துணை கண்காணிப்பாளர் ஆர்லியஸ்ரெபோனி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்தனர். அதனையடுத்து மறியல் கைவிடப்பட்டு மேலூரில் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சரவணபெருமாள் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன், கேசம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிலட்சுமிராஜா,, கிராம முக்கியஸ்தர்கள், டாஸ்மாக் கடை ஊழியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். அதில் 3 மாத கால அவகாசத்தில் வேறு இடத்துக்கு டாஸ்மாக் கடையை மாற்றுவது என சமரச பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது.


Next Story