மதுக்கடையை மூடக்கோரி பெண்கள் போராட்டம்
திருவையாறு அருகே மதுக்கடையை மூடக்கோரி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவையாறு அருகே மதுக்கடையை மூடக்கோரி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் மதுக்கடை
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே அளிசக்குடி கிராமத்தில் கடந்த 7 ஆண்டுகளாக அரசு டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிறது. கோவில்கள், அரசு நடுநிலைப்பள்ளி அருகில் உள்ள இந்த மதுக்கடையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாக அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் கவலை தெரிவித்து வருகிறார்கள்.
எனவே மதுக்கடையை மூட வலியுறுத்தி கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் மனு அளித்து உள்ளனர். அதிகாரிகளும் விரைவில் மதுக்கடை மூடப்படும் என உறுதி அளித்தனர்.
மூடக்கோரி போராட்டம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் 500 மதுக்கடைகள் மூடப்பட்டன. இதனால் அளிசக்குடி கிராம மக்களும் தங்கள் பகுதியில் உள்ள மதுக்கடை மூடப்படும் என எதிர்பார்த்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை அங்கு உள்ள மதுக்கடையை திறப்பதற்கு டாஸ்மாக் பணியாளர்கள் வந்தனர். அப்போது கிராமத்தை சேர்ந்த பெண்கள் ஒன்று திரண்டு கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நடுக்காவேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன், கிராம நிர்வாக அலுவலர் கர்ணன் ஆகியோர் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் நேற்று டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்படவில்லை. தங்கள் பகுதியில் மதுக்கடை திறக்கப்பட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அந்த பகுதி கிராம மக்கள் தெரிவித்தனர்.