பெண்கள்- பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
திருநாகேஸ்வரம் மேலவீதியில் வீட்டுமனை பட்டா வழங்காததை கண்டித்து பெண்கள், பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநாகேஸ்வரம் மேலவீதியில் வீட்டுமனை பட்டா வழங்காததை கண்டித்து பெண்கள், பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர் போராட்டம்
கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் பகுதியில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் நூறாண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருகின்றனர்.
இவர்களுக்கு வருவாய்த்துறையினர் மூலம் குடியிருக்கும் பகுதிக்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி பல ஆண்டுகளாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவில் பகுதியில் குடியிருக்கும் உங்கள் குடியிருப்புகளை ஏன் காலி செய்யக்கூடாது என நாகநாதசுவாமி கோவில் நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது. வீட்டுமனை வழங்காதது குறித்து தமிழக அரசிற்கு பலமுறை மனு அளித்தும், பலமுறை போரட்டங்கள் அறிவித்தும் பட்டா வழங்காததை கண்டித்து திருநாகேஸ்வரம் மேலவீதியில் ஆர்ப்பாட்டமும், ஊர்வலமாக கடைவீதி வழியாக சென்று சன்னாபுரம் மற்றும் அணைக்குடி கிராம நிர்வாக அதிகாரிகளிடம் 2 ஆயிரம் குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை அனைத்தையும் திரும்ப ஒப்படைக்கும் போராட்டமும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டம்
நேற்று காலை 10 மணிக்கு திருநாகேஸ்வரம் மேல வீதியில் 250 பெண்கள் உள்பட 750-க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். பட்டா வழங்காததை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் தடுப்பு அரண்கள் வைத்து போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது அந்த பகுதியில் திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர் சித்திக் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ராஜேஷ், ரேகா ராணி உள்பட 60-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
பேச்சுவார்த்தை
கும்பகோணம் வருவாய் தாசில்தார் வெங்கடேஸ்வரன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதுகுறித்து வருகிற 20-ந்தேதி கும்பகோணத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என உறுதி அளித்ததையடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.