கோவில்களில் அங்காடி அமைக்க மகளிர் சுயஉதவிக்குழுவினர் விண்ணப்பிக்கலாம்


கோவில்களில் அங்காடி அமைக்க மகளிர் சுயஉதவிக்குழுவினர் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 2 Sept 2023 12:15 AM IST (Updated: 2 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்களில் அங்காடி அமைக்க மகளிர் சுய உதவிக்குழுவினர் விண்ணப்பிக்க வருகிற 19-ந் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர்


கோவில்களில் அங்காடி அமைக்க மகளிர் சுய உதவிக்குழுவினர் விண்ணப்பிக்க வருகிற 19-ந் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அங்காடிகள்

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை நேரடியாக அதிகளவில் விற்பனை செய்ய மதிஅங்காடி என்ற பெயரில் வாகன அங்காடி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு கிடைப்பதுடன் சுற்றுலா பயணிகளுக்கும், பொருட்கள் தரமாக குறைந்த விலையில் கிடைக்க வழி வகை ஏற்படும். இந்த திட்டத்தின்படி திருவாரூர் மாவட்டத்தில் 3 அங்காடிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னுரிமை

இதனை தொடர்ந்து மாவட்ட அளவிலான தேர்வுகுழுவின் மூலம் திருவாரூர் தியாகராஜர் கோவில், மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில், குடவாசல், கூத்தனூர் சரஸ்வதி கோவில் ஆகிய 3 இடங்களில் மதிஅங்காடி அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

எனவே மதிஅங்காடியினை இயக்குவதற்கும், பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஆர்வமும், முன் அனுபவமும், ஒரு வருடத்திற்கு மேல் உள்ள சுயஉதவிக்குழுக்கள், மாற்றுத்திறனாளிகள், நலிவுற்றோர் குழுக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தரமதிப்பீடு

மேலும் சுயஉதவிக்குழு தர மதிப்பீட்டில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொடர்புடைய சுயஉதவிக்குழு, ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளில் வராக்கடன் ஏதுமில்லை என்ற சான்றிதழுடன் விண்ணப்பங்களை தொடர்புடைய வட்டார இயக்க மேலாண்மை அலகில் பெற்று வருகிற 19-ந் தேதிக்குள் (செவ்வாய்க்கிழமை) திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறை ஒருங்கிணைந்த கட்டிடத்தில் தரைதளத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story