கடனை பயன்படுத்தி பெண்கள் தொழில் முனைவோராக வேண்டும்


கடனை பயன்படுத்தி பெண்கள் தொழில் முனைவோராக வேண்டும்
x
தினத்தந்தி 19 Jan 2023 12:15 AM IST (Updated: 19 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சுய உதவிக்குழு மூலம் வழங்கப்படும் கடனை பயன்படுத்தி பெண்கள் தொழில் முனைவோராக வேண்டும் என கலெக்டர் லலிதா கூறினார்.

மயிலாடுதுறை

பொறையாறு:

சுய உதவிக்குழு மூலம் வழங்கப்படும் கடனை பயன்படுத்தி பெண்கள் தொழில் முனைவோராக வேண்டும் என கலெக்டர் லலிதா கூறினார்.

மக்கள் தொடர்பு முகாம்

செம்பனார்கோவில் அருகே மேலையூர் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கலெக்டர் லலிதா தலைமை தாங்கினார். நிவேதா முருகன் எம்.எல்.ஏ.முன்னிலை வகித்தார். சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் கண்மணி வரவேற்றார். முகாமில் கலெக்டர் லலிதா, நிவேதா முருகன் எம்.எல்.ஏ. ஆகியோர் 78 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். அப்போது கலெக்டர் லலிதா கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்கள் தொடர்பு முகாம் மாதம், மாதம் ஒவ்வொரு ஊராட்சியிலும் நடத்தப்படுகிறது.

கண்காட்சி

இம்முகாம் மூலம் தமிழ்நாடு அரசின் சார்பில் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்பதை கண்காட்சிகள் மூலம் விளக்கப்படுகிறது. வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கான திட்டம் செயல்படுத்தப்படுகிறது. எல்லா பெண்களும் சுயஉதவிக் குழு மூலம் வழங்கப்படும் கடனை பயன்படுத்தி தொழில்முனைவோராகி பொருளாதார ரீதியாக தங்களை மேம்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முகாமில் 125 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 53 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. மீதமுள்ள 72 மனுக்கள் பரிசீலனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

வேளாண் இடுபொருட்கள்

தோட்டக்கலைத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு மரக்கன்றுகளும், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 9 பயனாளிகளுக்கு பட்டாவும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு மடக்கு சக்கர நாற்காலியும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 10 விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்களும் வழங்கப்பட்டன.

இதில் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் உமாமகேஸ்வரி சங்கர், ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சேகர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முத்தமிழ்ச்செல்வன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயபாலன், தரங்கம்பாடி தாசில்தார் புனிதா, ஊராட்சி மன்றத் தலைவர் நளினி ராதாகிருஷ்ணன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story