புதிய சேமிப்பு திட்டத்தில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் சேர வேண்டும்
புதிய சேமிப்பு திட்டத்தில், பெண்கள் அதிக எண்ணிக்கையில் சேர வேண்டும் என அஞ்சல் துறை அழைப்பு விடுத்துள்ளது.
புதிய சேமிப்பு திட்டத்தில், பெண்கள் அதிக எண்ணிக்கையில் சேர வேண்டும் என அஞ்சல் துறை அழைப்பு விடுத்துள்ளது.
சேமிப்பு திட்டம்
நாகை கோட்ட அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் கஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2023-24-ம் நிதியாண்டிற்கான மத்திய நிதி நிலை அறிக்கையில், பெண்களின் மேம்பாட்டிற்காக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திட்டம் மகிளா சம்மான் சேமிப்பு திட்டம் ஆகும். இத்திட்டத்தில், பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் வயது வரம்பின்றி சேரலாம். இந்த மாதம் (ஏப்ரல்) 1-ந் தேதி முதல் தொடங்கிய இத்திட்டமானது வருகிற 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ந் தேதி வரை உள்ள காலக்கட்டத்தில் செயல்படும். இத்திட்டத்திற்கான வட்டி விகிதம் 7.5 சதவீதமாகும். காலாண்டிற்கு ஒரு முறை கூட்டு வட்டி அடிப்படையில் கணக்கிட்டு சேர்க்கப்படும். இத்திட்டத்தில், முதலீடு செய்ய குறைந்தபட்ச தொகை ரூ.1000, அதிகபட்ச தொகை ரூ.2 லட்சம்.
அஞ்சலகங்களை அணுகலாம்...
கணக்கை தொடங்கிய நாளில் இருந்து 2 ஆண்டுகளில் இத்திட்டம் முதிர்ச்சி அடையும். கணக்கை தொடங்கிய நாளில் இருந்து ஒரு ஆண்டுக்கு பிறகு தேவை ஏற்பட்டால், இருப்பு தொகையில் இருந்து 40 சதவீதம் திரும்ப பெறலாம். மேலும் கணக்கு தொடங்கிய 6 மாதங்களுக்கு பிறகு எந்த நேரத்திலும் கணக்கை முன்கூட்டியே முடிக்கலாம்.
அவ்வாறு முடிக்கப்படும் கணக்கிற்கு 5.5 சதவீதம் வட்டி கணக்கிட்டு வழங்கப்படும். பெண்களின் மேம்பாட்டிற்காக, பிரத்யேகமாக தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் சேர்ந்து பயன்பெறலாம். இதற்கு அருகில் உள்ள அஞ்சலகங்களை அணுகலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.