பெண்கள் தங்களுடைய பிரச்சினைகளை பற்றி பேச தயங்கக்கூடாது


பெண்கள் தங்களுடைய பிரச்சினைகளை பற்றி பேச தயங்கக்கூடாது
x

பெண்கள் தங்களுடைய பிரச்சினைகளை பற்றி பேச தயங்கக்கூடாது

தஞ்சாவூர்

பெண்கள் தங்கள் பிரச்சினைகளை பற்றி பேச தயங்கக்கூடாது என்று திருச்சி சிவா எம்.பி. கூறினார்.

திருச்சி சிவா எம்.பி. பேச்சு

தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் தமிழ்க்கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ரோசி தலைமை தாங்கினார். இதில் திருச்சி சிவா எம்.பி. கலந்து கொண்டு பெண்ணினம் போற்றுவோம் என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒரு காலத்தில் குழுக்களிலும், குடும்பத்திலும், அந்தந்த பகுதியிலும் தலைமைப் பொறுப்பைப் பெண்கள்தான் வகித்தனர். காலப்போக்கில் பல்வேறு மாற்றங்களால் ஆண் சமுதாயம் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. அதனால், பெண்கள் கட்டுப்பட்டு அடிமைப்பட்டவர்களாக மாறிய அவல நிலை உருவாகியது. இப்போது, வளர்ந்துள்ள சமுதாயத்தில் பெண்களுக்கு கல்வியும், வேலைவாய்ப்பும் தரப்படுவது மட்டுமல்லாமல், பொருளாதாரத்தில் சக்தி வாய்ந்தவர்களாக மாற்றுவதற்கான பல முயற்சிகள் மேற்கொள்ளப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

மாற வேண்டும்

என்றாலும், பெண்களின் நிலை இன்னும் மாறவில்லை. அவர்களுக்கு உரிமையும் கிடைக்கவில்லை. பெண்கள் என்பதில் தாழ்வு மனப்பான்மை ஏற்படக்கூடாது. பெண்களுக்கு கல்வி, வேலை, பொருளாதாரம் கிடைத்தாலும், அவர்களது திறமைகளுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை. வேலை பார்க்கும் இடங்களில் பெண்களுக்கு ஒடுக்குமுறை இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. தங்களது உரிமைகள் பறிபோவதை வெளிப்படுத்தத் தயங்கும் நிலையிலிருந்து பெண்கள் மாற வேண்டும். உலகின் தொன்மையான மொழிகளான கிரேக்கம், லத்தீன், சமஸ்கிருதம் உள்பட 6 மொழிகளில் தமிழில் மட்டுமே ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சங்க காலத்திலேயே 32 பெண்பாற் புலவர்கள் இருந்தனர். இந்தச் சிறப்பு வேறு எந்த மொழியிலும் இல்லை.

அங்கீகாரம் கிடைக்கும்

பெண் இனம் இல்லாமல் குடும்பம், சமுதாயம் இல்லை. வாழ்க்கையும் வெற்றி பெறாது என்பதை முதலில் பெண்கள் உணர வேண்டும். பாரதியார், பாரதிதாசனைப் படிக்கும்போது துணிவு பிறக்கும். பெண்கள் தங்களுடைய பிரச்சினைகளை பற்றிப் பேசவும், குரல் கொடுக்கவும் தயங்கக்கூடாது. அப்போதுதான் பெற்ற கல்விக்கு மரியாதை மட்டுமல்லாமல், சமுதாயத்தில் அங்கீகாரமும் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கவிஞர் அறிவுமதி கலந்து கொண்டு பேசினார். இதில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் இலக்கியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story