குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி திருவெண்ணெய்நல்லூர் அருகே பரபரப்பு


குடிநீர் கேட்டு    காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி    திருவெண்ணெய்நல்லூர் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 22 Sep 2022 6:45 PM GMT (Updated: 22 Sep 2022 6:45 PM GMT)

திருவெண்ணெய்நல்லூர் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர்,

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பெண்னைவலம் ஊராட்சிக்குட்பட்ட பூசாரிபாளையம் கிராமத்தில் 1,500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறாா்கள். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆழ்துளை கிணறு அமைத்து மின் மோட்டார் மூலம் தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிநீர் மின் மோட்டார் பழுதானது. இதனால் குடிநீரின்றி தவித்த அக்கிராம மக்கள் பழுதடைந்த மின்மோட்டாரை சீரமைக்க கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டனர். இருப்பினும் நடவடிக்கை இல்லை.

இதனால் ஆத்திரமடைந்த அக்கிராம பெண்கள் சாலை மறியல் செய்வதற்காக காலி குடங்களுடன் அங்குள்ள டி.கொளத்தூர் சாலைக்கு திரண்டு வந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட முயன்ற பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஓரிரு நாட்களில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை ஏற்ற பெண்கள், அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story