சாராய பாட்டில்களை சாலையில் போட்டு உடைத்த பெண்கள்
பொரவச்சேரி அருகே சாராய பாட்டில்களை பெண்கள் சாலையில் போட்டு உடைத்தனர். மேலும் சாராய வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிக்கல்:
பொரவச்சேரி அருகே சாராய பாட்டில்களை பெண்கள் சாலையில் போட்டு உடைத்தனர். மேலும் சாராய வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாராய விற்பனை
நாகை ஒன்றியம் பொரவச்சேரி ஊராட்சி குற்றம்பொருத்தானிருப்பு கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கீழத்தெருவில் உள்ள செங்கல் சூளை பகுதியில் காரைக்கால் மாவட்டம் வாஞ்சூர் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்து சிலர் விற்பனை செய்து வருவதால் இந்த பகுதியில் வசிக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் அச்சத்துடன் உள்ளனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் அந்த பகுதியில் சாராய விற்பனை நடந்து வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை அந்த பகுதியை சேர்ந்த பெண்கள், சாராய விற்பனை நடைபெறும் செங்கல் சூளை பகுதியில் திரண்டனர். இதை பார்த்ததும் அங்கு சாராய விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பின்னர் சாராய வியாபாரிகள் விட்டுச்சென்ற சாராயத்தை அங்கு திரண்டிருந்த மக்கள் கைப்பற்றினர்.
பாட்டில்கள் உடைப்பு
பின்னர் இது குறித்து கீழ்வேளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரிடம், அங்கு திரண்டிருந்த பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் கைப்பற்றப்பட்ட சாராயத்தை பொதுமக்கள் கீழே போட்டு உடைத்தனர்.
தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அதைதொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். அதையடுத்து அங்கு திரண்டிருந்த பொது மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.