தற்கொலை மிரட்டல் விடுத்த பெண்கள்
திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்துக்கு, 2 பெண்கள் எறும்பு பொடியுடன் வந்து தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் முனிசிபல் காலனியை சேர்ந்தவர் அஞ்சலை. இவர் திண்டுக்கல் கமலாநேரு மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அதே பகுதியை சேர்ந்தவர் பாப்பாத்தி. இவர் திண்டுக்கல் மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவர்கள் 2 பேரும் பணியில் இருந்து ஓய்வு பெற்று 1½ வருடம் கடந்த நிலையிலும், மாநகராட்சி சார்பில் வழங்கவேண்டிய ஓய்வூதியம் மற்றும் பணப்பலன்கள் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் தங்களுக்கு ஓய்வூதியம், பணப்பலன்கள் கேட்டு திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்துக்கு 2 பேரும் வந்தனர். பின்னர் திடீரென அவர்கள், கோரிக்கை அட்டையை பிடித்தபடி தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் தங்களது கையில் எறும்பு பொடியையும் வைத்திருந்தனர். தங்களுக்கு உடனடியாக பணப்பலன்கள் வழங்கவில்லை என்றால் எறும்பு பொடியை தின்று தற்கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்த தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் திண்டுக்கல் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் 2 பேரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றனர்.