சேலத்தில் எல்லைப்பிடாரியம்மன் கோவிலில் பெண்கள் பால்குட ஊர்வலம்-திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


சேலத்தில் எல்லைப்பிடாரியம்மன் கோவிலில் பெண்கள் பால்குட ஊர்வலம்-திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x

சேலத்தில் எல்லைப்பிடாரியம்மன் கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சேலம்

பங்குனி திருவிழா

சேலம் குமாரசாமிப்பட்டியில் பிரசித்தி பெற்ற எல்லைப்பிடாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி மாத திருவிழா கடந்த 21-ந் தேதி அம்மனுக்கு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.

விழாவில் முக்கிய நிகழ்வான அலகு குத்தும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.

பால்குட ஊர்வலம்

திருவிழாவில் நேற்று காலை பால்குட ஊர்வலம் நடைபெற்றது. அஸ்தம்பட்டி மாரியம்மன் கோவில் வளாகத்தில் இருந்து எல்லைப்பிடாரியம்மன் கோவிலுக்கு ஏராளமான பெண்கள் பால்குடம் சுமந்து கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் அம்மனுக்கு தங்கக்கவசம் சாத்துப்படி செய்யப்பட்டது. இதையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவில் இன்று (சனிக்கிழமை) இரவு 10 மணிக்கு சத்தாபரணமும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழு தலைவரும், மாநகராட்சி பணிக்குழு தலைவருமான எம்.ஆர்.சாந்தமூர்த்தி மற்றும் கோவில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


Next Story