சார்பதிவாளர் அலுவலகத்தில் பெண் தர்ணா


சார்பதிவாளர் அலுவலகத்தில் பெண் தர்ணா
x

ஜோலார்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்ததை கண்டித்து பெண் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர்

தர்ணா போராட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் கோபிநாதன் என்பவர் சார்பதிவாளராக உள்ளார். இந்தநிலையில் ஜோலார்பேட்டை அருகே உள்ள சின்ன மோட்டூர் கிராமத்தை சேர்ந்த சக்தி என்பவரது தங்கை சத்யா நேற்று முன்தினம் மாலை முதல் இரவு 9 மணி வரை சார் பதிவாளர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார்.

அப்போது சார் பதிவாளருக்கும், சத்யாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து வந்த ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் தர்ணாவில் ஈடுபட்டவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போலி ஆவணம்

அப்போது தர்ணாவில் ஈடுபட்ட பெண் கூறுகையில் எனது தாத்தா கோபால கிருஷ்ணனுக்கு சம்பத் மற்றும் ராஜி என இரண்டு மகன்கள். அதில் எனது தந்தை சம்பத், தாத்தா கோபாலகிருஷ்ணன், பாட்டி சரோஜா அம்மாள் ஆகிய மூன்று பேரும் இறந்துவிட்டனர். எனது பாட்டி சரோஜாம்மாள் பெயரில் சின்னமோட்டூர் கிராமத்தில் 50 சென்ட் நிலம் உள்ளது. அந்த நிலத்துக்கு சரோஜாம்மாளின் இறப்புச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் என அனைத்து ஆவணங்களும் போலியாக தயார் செய்து, எனது சித்தப்பா அவரது மகள் பெயரில் நேற்று முன்தினம் பத்திரப்பதிவு செய்துள்ளார்.

இதை அறிந்த நாங்கள் அந்த நிலத்துக்கு நாங்களும் வாரிசு எனக் கூறி அதற்கான முக்கிய ஆவணங்களை சார்பதிவாளரிடம் சமர்ப்பித்தோம். அதற்கு சார்பதிவாளர் இதில் வில்லங்கம் இருக்கிறது, எனவே உரிய ஆவணங்கள் இல்லாமல் பத்திரப்பதிவு செய்ய முடியாது என கூறி சமாதப்படுத்தினார். ஆனால் ரோஷினி பெயரில் அவர் பத்திர பதிவு செய்து கொடுத்துள்ளார். இதுகுறித்து சார்பதிவாளரிடம் கேட்டதற்கு, முறையான பதில் இல்லை. எனவே அவரை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்டுவருவதாக கூறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதை தொடர்ந்து இரு தரப்பினரும் உரிய ஆவணங்களை மாவட்ட சார் பதிவாளரிடம் சமர்ப்பித்து தீர்வு காண வேண்டும். இதில் முறைகேடு நடந்திருந்தால் முறையாக கோர்ட்டை அணுக வேண்டும் என போலீசார் அறிவுரை கூறினர். இதனையடுத்து அவர் தர்ணாவை கைவிட்டார்.


Next Story