மகளிர் உரிமை தொகை திட்ட சிறப்பு முகாம்
கரூர் மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை திட்ட சிறப்பு முகாம் இன்று முதல் 20-ந்தேதி வரை நடக்கிறது.
மகளிர் உரிமை தொகை திட்டம்
கரூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்கள் 2 கட்டங்களாக நடைபெற்றது. முதற்கட்ட முகாம் கடந்த ஜூலை மாதம் 24-ந்தேதி முதல் ஆகஸ்டு மாதம் 4-ந்தேதி வரை நடைபெற்றது.
2-ம் கட்ட முகாம் கடந்த 5-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடைபெற்றது.
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கு தகுதிகள் மற்றும் தகுதியின்மை வரையறை செய்து ஏற்கனவே அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்திராகாந்தி முதியோர் ஓய்வூதிய தேசிய திட்டம், முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம் மற்றும் அமைப்புச்சாரா தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.
சிறப்பு முகாம்கள்
தற்போது விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளின் குடும்ப தலைவிகள், முதியோர் ஓய்வூதிய திட்டங்களில் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள தகுதி வாய்ந்த மகளிர் மற்றும் ஏற்கனவே முகாம்களில் பதிவு செய்ய நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் வருகை புரிய இயலாத குடும்ப தலைவிகள் விண்ணப்பங்கள் பதிவு செய்ய, இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 20-ந்தேதி வரை 3 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. எனவே, இதுவரை விண்ணப்பிக்காத தகுதியான பயனாளிகள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.