மகளிர் ஜி20 உச்சி மாநாடு: வெளிநாட்டு பெண் பிரதிநிதிகளுக்கு வாழை இலையில் விருந்து
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் மகளிர் ஜி 20 உச்சி மாநாடு 2 நாட்கள் நடைபெற்று முடிந்தது.
மாமல்லபுரம்,
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் மகளிர் ஜி 20 உச்சி மாநாடு 2 நாட்கள் நடைபெற்று முடிந்தது. இந்த மாநாட்டில் பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, தென் கொரியா, வடகொரியா, அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, நார்வே, டென்மார்க் உள்ளிட்ட 18 நாடுகளை சேர்ந்த பெண் பிரதிநிதிகள் 150 பேர் பங்கேற்றனர். நேற்று கடைசி நாள் மாநாடு என்பதால் வெளிநாட்டு விருந்தினர்களை தமிழ் கலாசாரப்படி திருமண விருந்தில் பந்தி பரிமாறுவது போல, வடை, பாயசத்துடன் வாழை இலை விருந்து வைக்க மத்திய சுற்றுலா மற்றும் கலாசார துறை அமைச்சகம் முடிவு செய்தது.
அதன்படி மகளிர் ஜி 20 மாநாடு முடிந்தவுடன் வெளிநாட்டு பெண் பரதிநிதிகள் விருந்தில் அமர்ந்து வாழை இலையில் சாப்பிட்டனர். நட்சத்திர ஓட்டலின் உணவு கூட ஊழியர்கள் தமிழர்களின் பாரம்பரிய பட்டு வேட்டி, சட்டை அணிந்து விருந்து பரிமாறினர்.
வாழை இலையில் கூட்டு, சம்பார், பொரியல், பாயாசம் வழங்கி விருந்து பறிமாறப்பட்டது. வெளிநாட்டு பெண்கள் தங்களுக்கு பிடித்த கூட்டு, பொரியல், அப்பளம், பாயசம் போன்றவற்றை விரும்பி கேட்டு வாங்கி சாப்பிட்டு ருசி பார்த்தனர்.
வேட்டி, சட்டையில் மாறியிருந்த ஓட்டல் ஊழியர்கள் அவர்கள் அருகிலேயே நின்று கொண்டு திருமண விருந்துக்கு வரும் உற்றார், உறவினர்களை உபசரிப்பது போல சம்பார் வேண்டுமா? கூட்டு பொரியல் வேண்டுமா? என ஆங்கிலத்தில் கேட்டு பரிமாறினார்.
இந்த விருந்தில் கலந்து கொண்டவர்களை தமிழக பா.ஜ.க. துணைத்தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் பலர் வரவேற்றதை காண முடிந்தது.