ஈரோடு மாவட்டத்தில் 2 ஆயிரம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை


ஈரோடு மாவட்டத்தில் 2 ஆயிரம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை
x

ஈரோடு மாவட்டத்தில் முதல் கட்டமாக 2 ஆயிரம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் முதல் கட்டமாக 2 ஆயிரம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது.

மகளிர் உரிமைத்தொகை

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு மாதம்தோறும் மகளிர் உரிமைத்தொகையாக ரூ.1,000-ம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவங்கள் ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 1,207 ரேஷன் கடைகள் மூலம் 2 கட்டங்களாக வழங்கப்பட்டன. இதில் மாவட்டத்தில் உள்ள 7 லட்சத்து 67 ஆயிரத்து 316 ரேஷன் கார்டுதாரர்களில் 3 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் பெற்றனர்.

ஆனால் 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் மட்டுமே மகளிர் உரிமைத்தொகை வேண்டி பதிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில் பயனாளிகளை உறுதி செய்யும் பணி கடந்த சில வாரங்களாக நடந்தது. அதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் முதல் கட்டமாக 2 ஆயிரம் பேருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என, தமிழ்நாடு வீட்டுவசதித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி கடந்த சில தினங்களுக்கு முன்பு தெரிவித்தார்.

இன்று தொடக்கம்

கடந்த 3 நாட்களுக்கு முன்பு தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் ஒரு ரூபாய் மற்றும் 10 காசுகள் என சோதனை அடிப்படையில் செலுத்தப்பட்டது. இந்த நிலையில் அண்ணா பிறந்தநாளையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சீபுரம் மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.

இதேபோல் தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள் இந்த திட்டத்தை தொடங்கி வைக்கின்றனர். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் இன்று வேளாளர் கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் முத்துசாமி கலந்துகொண்டு மகளிர் உரிமைத்தொகை வழங்குகிறார்.

இன்ப அதிர்ச்சி

இதற்கிடையில் ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலான பயனாளிகளுக்கு நேற்று அவர்களது வங்கி கணக்கில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 செலுத்தப்பட்டுள்ளது. திடீரென வங்கி கணக்கில் ரூ.1,000 செலுத்தப்பட்டதற்கான குறுஞ்செய்தியை பார்த்ததும் பெண்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டதும் சம்பந்தப்பட்ட பெண்கள் தங்களது உறவினர்கள், அக்கம் பக்கத்தினருடன் இந்த தகவலை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். எனவே இந்த செய்தி காட்டுத்தீ போல் பரவியது. அதைத்தொடர்ந்து அனைவரும் தங்களது செல்போனிலும் குறுஞ்செய்திகள் வந்துள்ளனவா? என்று ஆவலுடன் பார்க்க தொடங்கினர்.


Next Story