ஆற்றுக்குள் மூங்கில் பாலம் சரிந்து விழுந்தது
கூத்தாநல்லூர் அருகே ஆற்றுக்குள் மூங்கில் பாலம் சரிந்து விழுந்து கிடப்பதால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
கூத்தாநல்லூர் அருகே ஆற்றுக்குள் மூங்கில் பாலம் சரிந்து விழுந்து கிடப்பதால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
மூங்கில் பாலம்
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள பழையனூர் கானூர் என்ற இடத்தில் கானூர் கிராமத்திற்கும், கோம்பூர் கிராமத்திற்கும் இடையே வெள்ளையாற்றின் குறுக்கே மூங்கில் மரங்கள் மற்றும் பலகைகளை கொண்டு நடைபாலம் அமைக்கப்பட்டது. இந்த நடைபாலத்தை கோம்பூர், கானூர், வேளுக்குடி, பழையனூர், மாளிகைத்திடல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர். மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு செல்வதற்கு இந்த பாலம் பயன்பட்டு வந்தது.
ஆபத்தான நிலையில் பாலம்
இந்த மூங்கில் பாலம் அடிக்கடி சேதம் அடைந்து வருவதும், அதனை தற்காலிகமாக சீரமைப்பு செய்து வருவதுமாக இருந்து வந்தது. கடந்த சில மாதங்களாக மூங்கில் பாலம் சேதமடைந்து ஆற்றுக்குள் சரிந்து அந்தரத்தில் தொங்குவது போல காணப்பட்டது.
ஆனாலும் ஆபத்தான நிலையில் இருந்த அந்த பாலத்தையே நடந்து சென்று வருவதற்கு மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த மூங்கில் பாலம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆற்றுக்குள் சரிந்து விழுந்து விட்டது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டி இருப்பதால் அவதிக்கு ஆளாகி உள்ளனர். எனவே இந்த பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அங்கு புதிதாக சிமெண்டு பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.