புயலால் பணிகள் பாதிப்பு கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் திறப்பது எப்போது? அமைச்சர் சேகர்பாபு பேட்டி
புயலால் பணிகள் பாதிப்புக்குள்ளான நிலையில் கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் திறப்பது எப்போது? என்பது குறித்து அமைச்சர் சேகர்பாபு பேட்டி அளித்தார்.
சென்னை கோயம்பேடு மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைத்திடவும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் தங்களது பயணங்களை சிரமமின்றி இனிதாக மேற்கொள்வதற்காக கடந்த 2019-ம் ஆண்டு கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கரில் 44.74 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.393 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் புறநகர் பஸ் நிலையம் கட்டும் பணி தொடங்கி தற்போது வரை நடந்து வருகிறது.
ஏற்கனவே கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் வருகிற பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழும அமைச்சராக கூடுதல் பொறுப்பேற்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நேற்று காலை கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார்.
ஆய்வுக்கு பின்னர் நிருபர்களை சந்தித்த அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது:-
சி.எம்.டி.ஏ. சார்பில் கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவு பெறுகின்ற வகையில் இனி மேலும் காலதாமதம் ஏற்படக்கூடாது என்பதற்காக ஆய்வு பணிகளை மேற்கொண்டேன். பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை வசதிகள், பஸ் நிலையம் திறந்த பிறகு போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்துவது போன்றவற்றை உறுதி செய்யும் வகையில் ஆய்வு நடைபெற்றது. கிளாம்பாக்கம் பஸ் நிலைய பணிகளை எந்த அளவுக்கு விரைவாக முடிக்க முடியுமோ அந்த அளவுக்கு விரைவாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு உண்டான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பஸ் நிலையத்தை திறப்பதற்கு முயன்று பார்க்கலாம், ஆனால் குறிப்பிட்ட தேதியை நிர்ணயிக்க முடியாது. ஏனென்றால் இன்றைய ஆய்வின் போது துறையின் செயலாளரும், அமைச்சர் தா.மோ.அன்பரசனும் பல்வேறு புதிய பணிகளை இந்த பஸ் நிலையத்தில் ஏற்படுத்த வலியுறுத்தி இருக்கிறார்கள், அவைகளையும் இணைத்து பணிகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதால் எவ்வளவு விரைவாக இந்த பஸ் நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்காக அளிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக இந்த பஸ் நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு உண்டான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
கோயம்பேடு பஸ் நிலையம், கிளாம்பாக்கம் பஸ் நிலையம், இதுபோன்று இன்னும் 2 அல்லது 3 பஸ் நிலையங்கள் வந்தால்தான் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப பொதுமக்களுடைய பயன்பாட்டிற்கு உதவியாக இருக்கும் என்பதால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் பெரிய மாற்றங்கள் எதுவும் ஏற்படுவதற்கு உண்டான வாய்ப்புகள் இல்லை.
கிளாம்பாக்கத்தில் மெட்ரோ ரெயில் திட்டம் வருவதற்கு தொடர்ந்து அதற்கு உண்டான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம், மெட்ரோ ரெயில் விரிவுப்படுத்துவதற்கு உண்டான கடிதத்தை சி.எம்.டி.ஏ. துறையின் செயலாளர், மொட்ரோ நிர்வாகத்தில் அளித்துள்ளார். எனவே அதற்கு உண்டான சாத்தியக்கூறுகள், ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமீபத்தில் ஏற்பட்ட புயல், மழை காரணமாக புறநகர் பஸ் நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
நிச்சயம் கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் எதிரே புதிய ரெயில் நிலையம் அமைப்பதற்கு உண்டான முயற்சி, தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அவருடன் சிறு குறு நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அரசு முதன்மைச் செயலர் அபூர்வா, சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர் அதுல் மிஸ்ரா, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் வண்டலூர் ஆராமுதன், ஆப்பூர் சந்தானம், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.