நெருங்கி வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை:பேக்கரிகளில் கேக் வகைகள் தயாரிக்கும் பணி தீவிரம்


நெருங்கி வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை:பேக்கரிகளில் கேக் வகைகள் தயாரிக்கும் பணி  தீவிரம்
x
தினத்தந்தி 21 Dec 2022 12:15 AM IST (Updated: 21 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பேக்கரிகளில் கேக் வகைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. உறவினர்கள் மூலம் வெளிநாடுகளுக்கும் கேக்குகள் அனுப்பி வைக்கப்படுகிறது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பேக்கரிகளில் கேக் வகைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. உறவினர்கள் மூலம் வெளிநாடுகளுக்கும் கேக்குகள் அனுப்பி வைக்கப்படுகிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகை

ஏசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 25-ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் 4 தினங்களே உள்ளன. கொரோனா தொற்று பரவலின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கிறிஸ்தவர்களால் சிறப்பாக கொண்டாட முடியாத நிலை இருந்தது.

இந்த ஆண்டு கொரோனா பரவல் முற்றிலும் கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்கான முன்னேற்பாட்டு பணிகளில் கிறிஸ்தவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் கிறிஸ்தவர்களின் வீடுகள், ஆலயங்கள் ஆகியவற்றை வண்ண, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கும் பணியும், பலவண்ண, பலவிதமான ஸ்டார்களை தோரணங்களாக அமைக்கும் பணியும், ஏசு கிறிஸ்துவின் பிறப்பை குறிக்கும் விதமாக சிறிய குடில்கள் முதல் ராட்சத குடில்கள் வரை ஆங்காங்கே அமைக்கும் பணிகளும், கிறிஸ்துமஸ் கேரல் பவனிகளும் குமரி மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகின்றன.

60-க்கும் மேற்பட்ட கேக் வகைகள்

கிறிஸ்துமஸ் பண்டிகை என்றாலே அதில் புத்தாடைகளுக்கும், கேக் வகைகளுக்கும், அறுசுவை விருந்துகளுக்கும் குறைவில்லை என்று சொல்லும் வகையில் இவை முக்கியத்துவம் பெறுகின்றன. அதனால் நாகர்கோவில், மார்த்தாண்டம், குளச்சல், கன்னியாகுமரி, தக்கலை, குலசேகரம், களியக்காவிளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைவீதிகள் பரபரக்கத் தொடங்கியுள்ளது. ஆண்களும், பெண்களும் குடும்பம், குடும்பமாகச் சென்று தங்களுக்குத் தேவையான ஜவுளி ரகங்களை தேர்வு செய்து வருகிறார்கள். எனவே கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருப்பதை காண முடிகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை என்றாலே ஏழை- எளியவர்கள் முதல் வசதி படைத்தவர்கள் வரை கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு கேக் வாங்கி அதனை வெட்டி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. எனவே கேக் இல்லாத கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இல்லை என்றே கூறலாம்.

இதனால் பேக்கரிகள், சுவீட் கடைகளிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுபவர்கள் ஆர்டர் கொடுப்பதற்காக கூடும் கூட்டத்தையும் காண முடிகிறது. இதனால் நாகர்கோவிலில் கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. அதில் பிளம் கேக் வகைகள் அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன. மேலும் கிறிஸ்துமஸ் தாத்தா கேக், கிறிஸ்துமஸ் மரம் கேக், பட்டர் பிளம் கேக், ரோஸ் மற்றும் ஆரஞ்சு வெல்வெட், ரெயின்போ கேக், ஸ்ட்ராபெரி கேக், பட்டர்பிளை கேக், பிளாக் பாரஸ்ட் கேக் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட கிறிஸ்துமஸ் கேக்குகள் இங்கு தயாரிக்கப்பட்டு வருகின்றன. பிளம் கேக் வகையில் சாண்டா கிளாஸ், ஸ்னோ ஒயிட் போன்றவைகளும் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஹோம் மேடு சாக்லேட்டுகளை மக்கள் அதிகம் விரும்பி வாங்கி வருவதால் அவையும் அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே இருப்பதால் கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பு பணிகள் குமரி மாவட்டம் முழுவதும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இரவு, பகலாக நடைபெறும் கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பு பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சூடுபிடித்தது

குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் சென்னை மற்றும் பல வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்கள், நண்பர்களுக்கும் இந்த கேக் வகைகள் அனுப்பப்பட்டு வருகின்றன. அதற்கான ஆர்டர்களும் நிறைய வருவதாக பேக்கரி கடைக்காரர்கள் கூறுகிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்று பரவல் இருந்ததால் கிறிஸ்துமஸ் கேக் விற்பனை மந்தமாக இருந்த நிலையில் இந்த ஆண்டு சூடு பிடித்துள்ளது. இதனால் ஏராளமானோர் கிறிஸ்துமஸ் கேக்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் கேக் விற்பனையும் சூடு பிடித்துள்ளது.


Next Story