சாலை விபத்து பகுதிகளை கணக்கெடுக்கும் பணி தீவிரம்
போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின்பேரில், விபத்து நடைபெறும் பகுதிகளை கண்டறியும் பணி நடக்கிறது.
தமிழகத்தில் அதிக அளவில் சாலை விபத்து நடைபெறும் மாவட்டங்களில் திண்டுக்கல்லும் ஒன்றாகும். இந்த சாலை விபத்துகள் மூலம் உயிரிழப்பு ஏற்படுகிறது. இதேபோல் விபத்தில் காயமடைந்து உடல் உறுப்பு இழந்து பலர் சிரமப்படுகின்றனர். எனவே சாலை விபத்துகள் நடைபெறும் பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
அதன்படி மாவட்டம் முழுவதும் அதிக விபத்துகள் நடைபெறும் பகுதிகளாக 127 இடங்கள் ஏற்கனவே கண்டறியப்பட்டன. மேலும் ரூ.4 கோடி செலவில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த பகுதிகளில் சாலையை அகலப்படுத்துதல், வேகத்தடை அமைத்தல், தடுப்புகள் அமைத்தல், தெருவிளக்கு அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடந்தன. இதுதவிர மதுபோதை மற்றும் அதிகவேகத்தில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்கின்றனர்.
எனினும் ஒருசில பகுதிகளில் விபத்துகள் நடப்பது தொடர்கிறது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின்பேரில், விபத்து நடைபெறும் பகுதிகளை கண்டறியும் பணி நடக்கிறது. இதில் அந்தந்த போலீஸ் நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், நான்கு வழிச்சாலை, உள்ளாட்சி சாலைகளில் விபத்து நடைபெறும் பகுதிகள், விபத்துக்கான காரணம் ஆகியவை குறித்து போலீசார் தீவிரமாக கணக்கெடுத்து வருகின்றனர்.