தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற இளைஞர்கள் ஆர்வமுடன் தொழில் முனைவோராக வேண்டும் கலெக்டர் மோகன் அறிவுரை
தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற இளைஞர்கள் ஆர்வமுடன் தொழில் முனைவோராக வேண்டும் என கலெக்டர் மோகன் அறிவுரை கூறினார்.
தொழிற்கடன் வழங்கும் நிகழ்ச்சி
விழுப்புரத்தில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகத்தின் மூலம் சிறப்பு தொழிற்கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தொழில் முதலீட்டுக்கழக கவுரவ இயக்குனர் சந்தானம் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் மோகன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு சிறப்பு தொழிற்கடனுதவியினை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
குறு, நடுத்தர தொழில் நிறுவனம் மூலம் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் இத்துறையினை மேம்படுத்திடும் வகையில் நடப்பாண்டிற்கு மட்டும் அரசால் ரூ.912 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மானியம்
தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்களை மேம்படுத்துவற்காக பல திட்டங்கள் இத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டில் 80 பேருக்கு ரூ.1.85 கோடி மதிப்பில் வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் விதமாக செலவு செய்யப்பட்டுள்ளது, 24 பேருக்கு ரூ.36.50 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் மூலமாக 2021-2022-ம் ஆண்டில் 18 பேருக்கு ரூ.2 கோடியில் மானியம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தற்போது வரை 3 பேருக்கு ரூ.51.76 லட்சத்தில் மானியம் வழங்கப்பட்டுள்ளது. படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உறுதிசெய்திடும் விதமாக கடந்த ஆண்டில் 91 பேருக்கு ரூ.89 லட்சம் மதிப்பில் மானியம் வழங்கி அதன் மூலமாக வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டை பொறுத்தவரை 20 பேருக்கு ரூ.21 லட்சத்தில் மானியம் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்று பல்வேறு தொழில் கடனுதவிகளை தமிழ்நாடு முதலீட்டுக்கழகத்தினால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆகவே கடனுதவிகளை பெற்று தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றிட இளைஞர்கள் ஆர்வமுடன் தொழில் முனைவோராக முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் தொழில் முதலீட்டுக்கழக உதவி பொது மேலாளர் சித்ராசெண்பகவள்ளி, கிளை மேலாளர் ரவி, மாவட்ட தொழில்மைய பொதுமேலாளர் தாமோதரன், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழக திட்ட செயல் அலுவலர் இளவரசன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஹரிஹரசுதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.