மணிக்கூண்டை புதுப்பிக்கும் பணி தொடக்கம்
வேலூர் லாங்குபஜாரில் மணிக்கூண்டை புதுப்பிக்கும் பணி தொடங்கப்பட்டது.
1920-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற 5-ம் ஜார்ஜ் மன்னர் மேரி ராணியின் முடிசூட்டு விழாவின் நினைவாகவும், உலகபோரில் கலந்து கொண்ட ராணுவ வீரர்கள் நினைவாகவும் வேலூர் லாங்குபஜாரில் மணிக்கூண்டு (மணி கோபுரம்) கட்டப்பட்டது.
வேலூர் மாநகரின் முக்கிய அடையாளமாக திகழும் இந்த மணிக்கூண்டு நாளடைவில் பராமரிப்பு இல்லாமல் கிடப்பில் போடப்பட்டது. கெடிகாரமும் ஓடுவதில்லை.
செடி, கொடிகள் படர்ந்து, மரங்கள் வளர்ந்து காணப்பட்டது.
இந்த நிலையில் அங்கு வளர்ந்துள்ள செடி, கொடி, மரங்களை அகற்ற மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் உத்தரவிட்டார்.
மணிக்கூண்டு மீண்டும் புதுப்பொலிவுடன் அமைக்கப்பட உள்ளது. அதன்படி இன்று அந்த செடி, கொடிகள் அகற்றும் பணியை ஊழியர்கள் தொடங்கினர்.
இதுகுறித்து கமிஷனர் கூறுகையில், மணிக்கூண்டினை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி செடி, கொடிகள் அகற்றி பழமை மாறாமல் வண்ணம் பூசப்படும். அதற்கான முதல்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
40 நாட்களுக்குள் பணிகள் முடிக்கப்படும். கெடிகாரம் ஓட வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. பழமை மாறாமல் புனரமைப்பதற்காக சிறந்த முறையில் பணிகளை மேற்கொள்ளும் நபர்களுக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது.
விரைவில் மணிக்கூண்டு புதுப்பொலிவு பெறும் என்றார்.